செங்கல்பட்டு மாவட்டத்தில் 80 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது - கலெக்டர் தகவல்
செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 80 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 100 சதவீத இலக்கை எட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் இணைந்து அதிகாரிகள் பணியாற்றுவார்கள் என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் கூறினார்.;
மாமல்லபுரம்,
செங்கல்பட்டு மாவட்டம், சதுரங்கப்பட்டினத்தில் வசிக்கும் பழங்குடி இருளர் இன மக்களின் வீடுகள் வடகிழக்கு பருவ மழையால் கடுமையாக சேதமடைந்தன. அதனால் அரசு சார்பில் புதிய வீடுகள் கட்டி கொடுக்கும் வரை, வசிக்க இடம் இல்லாமல் தவித்து வரும் அவர்களுக்கு தனியார் நிறுவனம் சார்பில் தற்காலிக குடில்கள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன. இதனை நேற்று கலெக்டர் ராகுல்நாத் திறந்து வைத்து 100 பழங்குடி இருளர் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 80 சதவீதம் பேருக்கும், 2-ம் தவணை தடுப்பூசி 50 சதவீதம் பேருக்கும் போடப்பட்டுள்ளது.
100 சதவீத இலக்கை எட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் இணைந்து அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.
மேலும் உருமாறிய கொரோனா (ஒமைக்ரான்) அதிவேகமாக பரவும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போடுதல், முககவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக செங்கல்பட்டு மாவட்ட கடற்கரை ஓரங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ஓட்டல், ரிசார்ட் உரிமையாளர்களை அழைத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது குறித்தும், அவர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டியதின் அவசியத்தை குறித்து விளக்க உள்ளோம். புத்தாண்டு அன்று கோவில்களில் கூடும் பக்தர்களும் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் திருக்கழுக்குன்றம் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.டி.அரசு, ஒன்றியக்குழு துணைத்தலைவர் எஸ்.ஏ.பச்சையப்பன், சதுரங்கப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதிசாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.