மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட என்ஜினீயரிங் மாணவர் பலி
தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதியதால் மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த என்ஜினீயரிங் மாணவர் பரிதாபமாக இறந்தார். அவருடைய தம்பி படுகாயம் அடைந்தார்.;
என்ஜினீயரிங் மாணவர்
ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்தவர் அபிலாஷ் (வயது 20). இவர், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். இதற்காக அங்குள்ள விடுதியில் தங்கி இருந்தார்.
இவருடைய தாயார், சென்னை அண்ணா நகரில் உள்ள சித்தி வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் நேற்று முன்தினம் இரவு அபிலாஷ், தனது தாயை பார்ப்பதற்காக அண்ணாநகரில் உள்ள சித்தி வீட்டுக்கு வந்தார். தாயை பார்த்துவிட்டு இரவில் மீண்டும் விடுதிக்கு புறப்பட்டார்.
அப்போது அவருடைய சித்தி மகனான அரிகரன் (19) என்பவரும் அவருடன் விடுதியில் தங்கி விட்டு வருவதாக கூறிவிட்டு தனது அண்ணன் அபிலாசுடன் மோட்டார்சைக்கிளில் புறப்பட்டார். அரிகரனும் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார்.
மேம்பாலத்தில் இருந்து விழுந்து சாவு
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். வேலப்பன்சாவடி அருகே உள்ள மேம்பாலத்தில் சென்றபோது திடீரென தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அபிலாஷ், அரிகரன் இருவரும் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு சுமார் 15 அடி உயர மேம்பாலத்தி்ல் இருந்து கீழே விழுந்தனர்.
இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இருவரையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அபிலாஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயம்
விபத்தில் படுகாயமடைந்த அரிகரன், அண்ணா நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்துவந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான அபிலாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.