5 ஆயிரம் விமானங்களின் சரக்குகளை கையாண்டு சென்னை விமான நிலையம் சாதனை
பிப்ரவரி 18-ந்தேதி முதல் டிசம்பா் 20-ந்தேதி வரையிலான 10 மாதங்களில் 5 ஆயிரம் விமானங்களின் சரக்குகளை சென்னை விமான நிலைய சரக்கக ஊழியா்கள் கையாண்டு சாதனை படைத்துள்ளனா்.;
கொரோனா வைரஸ் முதல் அலை வேகமாக பரவியதால் சென்னை உள்ளிட்ட நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கடந்த 2020-ம் ஆண்டு மாா்ச் 25-ந்தேதியில் இருந்து பயணிகள் விமான போக்குவரத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. சரக்கு விமானங்கள் போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி வழங்கியது.
கொரோனா 2-வது அலை நேரத்தில் சென்னை விமான நிலைய சரக்ககத்தில் சரக்கு விமானங்களின் வருகையும், சரக்குகளை கையாளுவதும் பல மடங்கு அதிகரித்தது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் விமான நிலைய ஆணையகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள துணை நிறுவன ஊழியர்கள் சரக்குகளை கையாளுகின்றனர். பிப்ரவரி 18-ந்தேதி முதல் டிசம்பா் 20-ந்தேதி வரையிலான 10 மாதங்களில் 5 ஆயிரம் விமானங்களின் சரக்குகளை சென்னை விமான நிலைய சரக்கக ஊழியா்கள் கையாண்டு சாதனை படைத்துள்ளனா்.
ஏப்ரல் முதல் ஜூலை வரை வெளிநாடுகளில் இருந்து பெருமளவு மருத்துவ உபகரணங்கள் சரக்கு விமானங்கள் மற்றும் இந்திய ராணுவ விமானங்கள், ஹெலிகாப்டா்களில் தொடா்ச்சியாக வந்தன. கொரோனா தடுப்பூசி மருந்துகள் சரக்கக பாா்சல்களாக தற்போது வரை வந்து கொண்டு இருக்கின்றன. கத்தாா், துபாய், ஹாங்காங் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து வழக்கமாக வரும் சரக்குகளும் வந்து கொண்டு இருக்கின்றன.
கொரோனா ஊரடங்கால் ஊரே முடங்கிக்கிடந்த நேரத்திலும் சென்னை விமான நிலைய சரக்ககப் பிரிவு இடைவிடாமல் செயல்பட்டது. 10 மாதங்களில் 5 ஆயிரம் விமானங்களின் சரக்குகளை ஏற்றி, இறக்கி கையாண்டு சாதனை படைத்ததை விமான நிலைய சரக்ககப்பிரிவு ஊழியா்கள் கேக் வெட்டி கொண்டாடினாா்கள். 5 ஆயிரம் விமானங்களின் சரக்குகளை கையாண்டதை குறிக்கும் வகையில் 5000 என்ற வடிவில் அணிவகுத்து நின்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனா். அவர்களுக்கு விமான நிலைய அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.