படப்பை அருகே பெயிண்டர் கொலை வழக்கில் 6 பேர் கைது
படப்பை அருகே பெயிண்டர் கொலை வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.;
கொலை
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சோமங்கலம் புது நல்லூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 29). பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த வாரம் சோமங்கலம் புதுநல்லூர் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் பின்புறம் கொலை செய்யப்பட்டு அவரது உடல் தார்ப்பாயில் சுற்றப்பட்ட நிலையில் கிடந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சோமங்கலம் போலீசார் விசாரணை செய்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் 7 பேரை பிடித்து விசாரித்து வந்தனர்.
கைது
இந்த நிலையில் கொலையில் தொடர்புடையதாக புதுநல்லூர் பகுதியை சேர்ந்த அன்பு (24), பழையநல்லூர் பகுதியை சேர்ந்த சதீஷ் (30), வெங்கடேசன் (20), நாகராஜ் (20), ஸ்ரீபெரும்புதூர் பருத்திப்பட்டு பகுதியை சேர்ந்த யுவராஜ் ( 20), புதுநல்லூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (36) ஆகியோரை சோமங்கலம் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
போலீஸ் விசாரணையில் சங்கர் ஆட்களை வைத்து பெயிண்டர் வேலை செய்து வந்ததாகவும் ஒரு சில ஆர்டர்களை அன்புவிடம் கொடுப்பார். அந்த வேலைகளை அன்பும் செய்து கொடுப்பார் என்பது தெரியவந்துள்ளது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பழைய நல்லூர் பகுதியில் சங்கர் மூலம் வந்த ஒரு வீட்டின் வேலையை அன்பு செய்து கொண்டிருந்தார். மறுநாள் சனிக்கிழமை சங்கர் அன்புவை வேலைக்கு அழைத்துள்ளார். அப்போது நான் மது குடித்துள்ளேன். வேலைக்கு வரவில்லை என்று சங்கரிடம் அன்பு தெரிவித்தார். அப்போது சங்கர், நான் உனக்கு வேலை எடுத்து தருகிறேன். அதை செய்கிறாய். ஆனால் எனக்கு ஒரு வேலை அவசரம் என்ற போது ஏன் வர மறுக்கிறாய் என கேட்டுள்ளார். அப்போது தகராறு ஏற்பட்டு சங்கர் அன்புவை அடித்து விட்டு சென்றதாக தெரிகிறது.
மோட்டார் சைக்கிள், கத்தி பறிமுதல்
இதனை தொடர்ந்து சங்கர் அன்புவின் செல்போனை தொடர்பு கொண்டபோது, பழையநல்லூர் பகுதியில் உள்ள ஒரு தோப்பு பகுதிக்கு சங்கரை வர சொல்லி உள்ளார். இதனை தொடர்ந்து சங்கர் தோப்பு பகுதிக்கு சென்றவுடன் அங்கிருந்த அன்பு மற்றும் அன்புவின் நண்பர்கள் சேர்ந்து சங்கரை கொலை செய்ததாகவும் கொலை செய்யப்பட்ட உடலை எடுத்து வந்து சோமங்கலம் பஸ் நிறுத்தம் பின்புறம் வீசி விட்டு சென்றுள்ளனர் என்பவை தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், கத்தி போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட 6 பேரையும் போலீசார் ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். அவர்களை நீதிபதி சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.