ஊருக்குள் புகுந்த காட்டுயானைகள்

துடியலூர், மருதமலையில் ஊருக்குள் புகுந்த காட்டுயானைகளால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.;

Update:2021-12-23 19:30 IST
துடியலூர்

துடியலூர், மருதமலையில் ஊருக்குள் புகுந்த காட்டுயானைகளால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

வீட்டின் கதவை உடைத்தன

கோவை துடியலூர் அருகே குருடம்பாளையம் லட்சுமி நகரில் நேற்று அதிகாலையில் 3 காட்டுயானைகள் புகுந்தன. தொடர்ந்து ஒரு வீட்டின் முன்பு வைக்கப்பட்டு இருந்த பிளாஸ்டிக் தொட்டியை கீழே தள்ளி தண்ணீரை குடித்தன. மேலும் வீட்டின் கதவை உடைத்ததோடு கொட்டகையையும் சரித்தன.

இதையடுத்து அங்கிருந்து காட்டுயானைகள் வெளியேறி தெருக்களில் சுற்றித்திரிந்தன. அவை சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக அந்த பகுதியில் முகாமிட்டு இருந்தன. அதன்பிறகு மீண்டும் மலைப்பகுதிக்கு திரும்பின.

மருதமலை 

இதேபோன்று மருதமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் காட்டுயானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் இரவில் 2 குட்டிகள் உள்பட 8 காட்டுயானைகள் மருதமலை அடிவாரத்தில் உள்ள ஐ.ஓ.பி. காலனிக்கு புகுந்தன. இதை கண்ட பொதுமக்கள் பீதி அடைந்தனர். 

மேலும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி காட்டுயானைகளை விரட்டியடித்தனர். காட்டுயானைகள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்