பழுதடைந்த வகுப்பறை கட்டிடம் இடித்து அகற்றம்
கோவை மாநகராட்சி பள்ளியில் பழுதடைந்த வகுப்பறை கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது.;
கோவை
கோவை மாநகராட்சி பள்ளியில் பழுதடைந்த வகுப்பறை கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது.
2,065 பள்ளிகளில் ஆய்வு
நெல்லையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியானார்கள். இதையடுத்து மாநிலம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு பழுதடைந்த மற்றும் பாழடைந்த நிலையில் உள்ள கட்டிடங்களை உடனடியாக இடித்து அகற்ற உத்தரவிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து கோவையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டு பள்ளிகளில் பழுதடைந்த மற்றும் பாழடைந்த நிலையில் கட்டிடங்கள் உள்ளதா? என ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வு மொத்தம் 2,065 பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டது.
வகுப்பறை கட்டிடம்
இந்த நிலையில் கோவை ஒப்பணக்கார வீதி அருகே கே.ஜி வீதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பழுதடைந்த வகுப்பறை கட்டிடம் இருப்பது ஆய்வில் தெரியவந்தது. இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 55 மாணவர்கள் படித்து வருகிறார்கள். அங்குள்ள பழைய வகுப்பறை கட்டிடம் 1950-ம் ஆண்டு கட்டப்பட்டது.
தற்போது அந்த கட்டிடம் பழுதடைந்த நிலையில் பயன்பாடு இல்லாமல் உள்ளது.தற்போது புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு, அதில்தான் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. எனவே மாணவர்களின் நலன் கருதி பழுதடைந்த நிலையிலுள்ள பழைய வகுப்பறை கட்டிடத்தை இடித்து அகற்ற உத்தரவிடப்பட்டது. அதன்படி நேற்று மாநகராட்சி ஊழியர்கள் கட்டிடத்தை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.