குடிநீர் தட்டுப்பாடு
கோவை மாநகராட்சி 26-வது வார்டு வெள்ளக்கிணறு பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் மற்றும் உப்பு தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதன்காரணமாக அங்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் சிரமத்தை சந்திக்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக குடிநீர் மற்றும் உப்பு தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆர்.மணிமாறன், கோவை.
குப்பைகள் அகற்றப்படுமா?
கோவை ஒலம்பஸ் கருணாநிதி நகர் பகுதியில் சாலையோரத்தில் குப்பை குவிந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் நிலவி வருகிறது. இந்த சாலை வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் தங்களது மூக்கைப் பொத்தியபடி தான் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.
செந்தில், ஒலம்பஸ்.
தடுப்பு வேலி
கோவை நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது ஒதுக்கீட்டு இடங்கள் மாநராட்சி பெயர் பலகை இல்லாமலும், தடுப்பு வேலி அமைக்கப்படாமலும் நகரின் பல பகுதிகளில் உள்ளன. இவை ஆக்கிரமிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சிக்கு சொந்தமான அனைத்து நிலங்களையும் தடுப்பு வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும்.
சூர்யமூர்த்தி, சிங்காநல்லூர்.
பஸ் வசதி வேண்டும்
சூலூர் தாலுகா காடம்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட குமாரபாளையம் வழியாக இயக்கப்பட்ட வந்த அரசு பஸ் நிறுத்தப்பட்டு உள்ளது. அதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் சிரமப்பட்டு வருகிறார்கள். அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீண்டும் அந்த வழியாக அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுப்பார்களா?
ராஜேந்திரன், சூலூர்.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
கோவை பீளமேடு விளாங்குறிச்சி ரோடு பகுதியில் சாக்கடை கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் தூர்வாரப்படாததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்கள் சிரமப்படுகிறார்கள். மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வாரி கழிவுநீர் தங்குதடையின்றி செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.
மதன், பீளமேடு.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
கோவை காந்திபுரம் டாடாபாத் டாக்டர் சுப்பராயன் வீதியில் மின்வாரிய அலுவலகம் செல்லும் வழியில் குப்பைத்தொட்டி உள்ளது. இந்த குப்பைத்தொட்டியில் குப்பைகள் நிரம்பி குவியல் போல் காட்சி அளிக்கிறது. குப்பைகள் அகற்றப்படாததால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு சுற்றுச்சூழல் மாசு அடைகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள்.
சுந்தரம், கோவை.
பழுதான சாலை
கோவை காந்திபார்க்கில் இருந்து தொண்டாமுத்தூர் செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள் தட்டுத் தடுமாறி செல்கிறது. மேலும்அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன. இதேபோல் குண்டும், குழியுமாக காணப்படுவதால் பொதுமக்களும் நடந்து செல்ல சிரமப்படுகிறார்கள். ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாரியம்மாள், கோவை.
திறக்கப்படாத கழிப்பிடம்
கோவை சிங்காநல்லூர் காந்தி நகர் பகுதியில் கழிப்பிடம் உள்ளது. இந்த கழிப்பிடம் கடந்த சில மாதங்களாக திறக்கப்படாமல் பூட்டியே காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள முதியவர்கள், பெண்கள் கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகிறார்கள். மேலும், திறந்த வெளிப்பகுதியை கழிப்பிடமாக பயன்படுத்துவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிப்பிடத்தை திறக்க நடவடிக்கை எடுப்பார்களா?.
விஷ்வா, சிங்காநல்லூர்.
குண்டும், குழியுமான சாலை
கோவை ரேஸ்கோர்ஸ் ரோடு தாமஸ் பூங்கா அருகே உள்ள சாலை மிகவும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகிறார்கள். எனவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.
தங்கராஜ், ரேஸ்கோர்ஸ்.
விபத்துகள் தடுக்கப்படுமா?
கோவை ராமநாதபுரம் அருகே உள்ள சுங்கம் ரவுண்டானா பகுதியில் வாகனங்கள் அனைத்தும் தாறுமாறாக செல்கிறது. இதனால் அங்கு அடிக்கடி சிறு சிறு வாகன விபத்துகள் அரங்கேறுகிறது. மேலும் அந்த சாலையை கடக்க முடியாமல் பொதுமக்களும் சிரமப்படுகிறார்கள். அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்துகளை தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராணி, கோவை.