பொட்டாசியம் உரம் கூடுதல் விலைக்கு விற்பனை
பொட்டாசியம் உரம் கூடுதல் விலைக்கு விற்பனை;
பொள்ளாச்சி
பொள்ளாச்சி பகுதியில் பொட்டாசியம் உரம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக முறையீட்டு குழு கூட்டத்தில் சப்-கலெக்டரிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
போலி உரம் தயாரிப்பு
கொரோனா பரவல் காரணமாக கடந்த 21 மாதங்களுக்கு பிறகு பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் முறையீட்டு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நேர்முக உதவியாளர் வெங்கடாச்சலம், தாசில்தார்கள் அரசகுமார், சசிரேகா, பானுமதி மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் பேசும் போது கூறியதாவது:-
பொள்ளாச்சி பகுதியில் பொட்டாசியம் உரம் ரூ.700 கூடுதலாக வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதை அதிகாரிகள் ஆய்வு செய்து கட்டுப்படுத்த வேண்டும். மேலும் குரும்பபாளையம் ஊராட்சியில் போலி உரம் தயாரித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் போலியாக தயாரிக்கப்பட்ட உரங்கள் எந்தெந்த பகுதிக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்த விவரங்களை சேகரிக்க வேண்டும். ஆழியாற்றில் மோட்டார் வைத்து தண்ணீரை எடுத்து வணிக நோக்கில் பயன்படுத்தி வருகின்றனர். எனவே மோட்டாரை பறிமுதல் செய்து தண்ணீர் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். மின்சார வாரிய அதிகாரிகள் மின் இணைப்பு கொடுக்கும் போது நிலத்தடி நீரை எடுக்க அனுமதி பெறப்பட்டு உள்ளதா? என்று ஆய்வு செய்ய வேண்டும்.
தென்னை நல வாரியம்
ஆனைமலை பகுதியில் வனவிலங்குகளால் விவசாய பயிர்கள் சேதமடைந்தால் வனத்துறையினர் இழப்பீடு கொடுக்க தயாராக உள்ளனர். ஆனால் அதற்குரிய சான்றிதழை பெறுவதற்கு வருவாய் துறையினர் அலைக்கழிக்கின்றனர். பொட்டாசியம் விலை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதால் ஆனைமலை பகுதியில் நடவு பணி பாதிக்கப்பட்டு உள்ளது. தென்னை விவசாயிகளின் குறைகளை தீர்க்க பொள்ளாச்சியில் தென்னை நல வாரியம் அமைக்க வேண்டும்.
கொப்பரை கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.101 ஆக அரசு நிர்ணயித்து உள்ளது. ஆனால் ஆனைமலையில் நடந்த ஏலத்தில் கிலோவுக்கு ரூ.93 வரை தான் ஏலம் போனது. மேலும் கொரோனா காரணமாக தேங்காய், இளநீருக்கு உரிய விலை கிடைப்பதில்லை. இதனால் விவசாயிகள் வங்கியில் வாங்கிய கடனை செலுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். இதற்கிடையில் வங்கி அதிகாரிகள் ஆட்களை வைத்து மிரட்டுகின்றனர். மயில்களால் பயிர்கள் சேதமடைகின்றன. இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கூட்டத்தில் தெரிவிக்கப்படும் குறைகளை அடுத்த கூட்டம் நடைபெறுவதற்கு முன் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.