சென்னை எழும்பூர் கோர்ட்டில் 4 பேர் சரண்

கோவை கல்லூரி மாணவர் கொலை வழக்கில் தேடப்பட்ட 4 பேர், சென்னை எழும்பூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.;

Update:2021-12-23 22:16 IST
கணபதி

கோவை கல்லூரி மாணவர் கொலை வழக்கில் தேடப்பட்ட 4 பேர், சென்னை எழும்பூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

கல்லூரி மாணவர் கொலை

கோவை ரத்தினபுரி பக்தவச்சலம் வீதியை சேர்ந்தவர் விஜயன். இவருடைய மகன் ஸ்ரீராம் என்ற குரங்கு ஸ்ரீராம்(வயது 22). இவர் பெரிநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 20-ந் தேதி தனது நண்பர் கவாஸ்கான்(23) என்பவருடன் ரத்தினபுரியில் இருந்து சின்னவேடம்பட்டி அஞ்சுகம் நகர் வழியாக துடியலூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து சென்ற 4 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென ஸ்ரீராம், கவாஸ்கானை வழிமறித்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொல்ல முயற்சித்தினர். இதில் கவாஸ்கான் அந்த கும்பலிடம் இருந்து தப்பி ஓடிவிட்டார். ஸ்ரீராம் அந்த கும்பலிடம் சிக்கி கொண்டார். ஸ்ரீராமை சரமாரியாக அந்த கும்பல் வெட்டிக்கொன்றது.

சென்னை கோர்ட்டில் சரண்

இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் நடந்த விசாரணையில் ஸ்ரீராமுக்கும், கண்ணப்பன் நகரை சேர்ந்த கோகுல் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்தது. இதற்கிடையே ஸ்ரீராமை கொலை செய்தவர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது தனிப்படை போலீசார் அவர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இந்தநிலையில் கொலை தேடப்பட்டு வந்த சுஜின்குமார், கோகுல், ரவீந்திரன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் நேற்று காலையில் சென்னை எழும்பூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை கோவைக்கு அழைத்து வந்து காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்