லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.51 லட்சம் சிக்கிய சம்பவம்: உதவி செயற்பொறியாளர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு; கோர்ட்டில் பணம் ஒப்படைப்பு
ஈரோட்டில் நேற்று முன்தினம் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.51 லட்சம் சிக்கிய சம்பவம் தொடர்பாக உதவி செயற்பொறியாளர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன், கைப்பற்றப்பட்ட பணம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.;
ஈரோடு
ஈரோட்டில் நேற்று முன்தினம் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.51 லட்சம் சிக்கிய சம்பவம் தொடர்பாக உதவி செயற்பொறியாளர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன், கைப்பற்றப்பட்ட பணம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.
உதவி செயற்பொறியாளர் அலுவலகம்
ஈரோடு கலெக்டர் அலுவலகம் 7 மாடி கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இங்கு கலெக்டர் அலுவலகத்துடன், பல்வேறு அரசுத்துறை அலு வலகங்களும் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள 3-வது மாடியில் பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளது. இங்கு உதவி செயற்பொறியாளராக நாகராஜ் (வயது 59), பணியாற்றி வந்தார். இளநிலை பொறியாளராக நீலாவதி பணியாற்றி வந்தார். இந்த அலுவலகம் திருப்பூர் மண்டலத்துக்கு உள்பட்டதாகும். ஈரோடு மாவட்டத்தில் 42 பேரூராட்சிகள், திருப்பூர் மாவட்டத்தில் 15 பேரூராட்சிகள் இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த நிலையில் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு உள்பட்ட 52 பேரூராட்சிகளில் நடைபெற உள்ள பணிகளுக்காக நேற்று முன்தினம் டெண்டர் விடப்பட்டது.
ரூ.51 லட்சம் சிக்கியது
அதைத்தொடர்ந்து ஒப்பந்ததாரர்களிடம் இருந்து லஞ்சப்பணம் வசூல் நடப்பதாக ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தன. அதன்பேரில் ஈரோடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ் மற்றும் இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். நேற்று முன்தினம் மாலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கலெக்டர் அலுவலக கட்டிடம் 3-வது தளத்தில் உள்ள பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்துக்குள் அதிரடியாக நுழைந்தனர்.
அங்குள்ள கதவுகள் அடைக்கப்பட்டன. யாரும் உள்ளே வரவும், வெளியே செல்லவும் அனுமதிக்கப்படவில்லை. போலீசார் சோதனை செய்தபோது கணக்கில் வராத லஞ்சப்பணம் ரூ.51 லட்சத்து 32 ஆயிரம் பிடிபட்டது. அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். நேற்று முன்தினம் இரவு 11 மணி வரை இந்த சோதனை நடந்தது.
நேற்று இந்த சம்பவத்தில் தொடர்பு உடையவர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினார்கள்.
5 பேர் மீது வழக்கு பதிவு
அதைத்தொடர்ந்து ஈரோடு மண்டல பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் ஆர்.நாகராஜன், இளநிலை பொறியாளர் ஆர்.நீலாவதி, இளநிலை (வரைவாளர் பொறுப்பு), திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டி பேரூராட்சி இளநிலை பொறியாளர் கே.செல்லமுத்து, திருப்பூர் மாவட்டம் மூலனூர் பேரூராட்சி எலக்ட்ரீசியன் எம்.செல்வம், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்த டி.வெங்கடேஷ் (இவர் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தார்) ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக கிடைத்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட உள்ளது. அப்போது கூடுதலாக சில அதிகாரிகளின் பெயரும் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் கைப்பற்றிய லஞ்சப்பணம் ரூ.51 லட்சத்து 32 ஆயிரம் ஈரோடு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. அரசு அதிகாரிகள், அரசுப்பணியில் இருப்பவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து இருப்பதால், அவர்கள் விரைவில் பணியிடை நீக்கம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.