சுற்றுலாத்துறை சார்பில் மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா

மாமல்லபுரம் நாட்டிய விழாவை மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.;

Update:2021-12-24 17:12 IST
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தமிழக மற்றம் மத்திய சுற்றுலாத்துறையின் பங்களிப்புடன் ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி மாதத்தில் நாட்டிய விழா நடைபெறுகிறது.

இந்த ஆண்டுக்கான விழா நேற்று மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் சந்தீப்நந்தூரி தலைமையில், சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

விழாவில் நேற்று முதல் நாள் நிகழ்ச்சியாக திரைப்பட நடிகை ஷோபனா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. விழா தொடங்குவதற்கு முன்னதாக சென்னை இசைக்கல்லூரி மாணவர்களின் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. 

விழாவில் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சுற்றுலாத்துறை இயக்குனர் சந்திரமோகன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், எம். எல்.ஏ.க்கள் எஸ்.எஸ்.பாலாஜி, அரவிந்த்ரமேஷ், வரலட்சுமி மதுசூதனன், மாமல்லபுரம் முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் சி.இ.சத்யா, வெ.விசுவநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழா வருகிற ஜனவரி மாதம் 23-ந் தேதி வரை ஒரு மாதம் நடைபெறுகிறது. கடற்கரை கோவில் நுழைவு வாயிலில் நடைபெறும் நாட்டிய விழாவை கண்டுகளிக்க சுற்றுலா பயணிகளுக்கு கட்டணமின்றி இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விழாவின் முடிவில் மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் ராஜாராமன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்