காஞ்சீபுரத்தில் வீட்டுக்குள் புகுந்து கத்தி முனையில் 30 பவுன் நகை பறிப்பு
காஞ்சீபுரத்தில் வீட்டுக்குள்முகமூடி அணிந்த 2 நபர்கள் புகுந்து கத்தி முனையில் 30 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.;
காஞ்சீபுரம் மாமல்லன் நகர் அருகே வசித்து வருபவர் சீனிவாசன் (வயது 41), இவர் காஞ்சீபுரத்தில் உள்ள டி.என்.பி.எஸ்சி. பயிற்சி மையத்தில் ஆசிரியராக உள்ளார். இவர் தனது சகோதரர்களுடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார்.
இந்தநிலையில் சீனிவாசன் வெளியே சென்று இருந்த நிலையில் வீட்டில் அவரது தந்தை, தாய் மற்றும் அண்ணி ஆகியோர் இருந்தனர். நேற்று மதியம் 1 மணி அளவில் திடீரென்று வீட்டுக்குள் முகமூடி அணிந்த 2 நபர்கள் கத்தியுடன் நுழைந்தனர். கத்திமுனையில் அவர்களை மிரட்டி அவர்களது கை, கால்களை கட்டிப்போட்டு அவர்கள் அணிந்திருந்த நகைகள் உள்பட வீட்டில் இருந்த 30 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை குறித்து தகவல் கிடைத்ததும் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவின் பேரில் காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.