என்டிசி ஆலைகளில் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
என்டிசி ஆலைகளில் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்;
கோவை
நிலுவை ஊதியத்தை வழங்க கோரி என்.டி.சி. தொழிற்சாலைகளில், தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
என்.டி.சி. தொழிற்சாலைகள்
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 24-ந் தேதி மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகள் தற்போது வரை திறக்கப்படவில்லை.
அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பாதி ஊதியம் மட்டும் வழங்கப்பட்டு வந்தது. கடந்த அக்டோபர் மாதம் முதல் அந்த ஊதியமும் வழங்கப்படவில்லை.
தேசிய பஞ்சாலை கழகத்திற்கு ரூ.50 ஆயிரம் கோடி சொத்துகள் இருந்தும் ரூ.1,000 கோடி முதலீட்டில் என்.டி.சி. ஆலைகளை இயக்க மத்திய அரசு முன்வர வில்லை என்று குற்றம் சாட்டிய தொழிற்சங்கத் தினர் ஒருங்கிணைப்பு குழுவை ஏற்படுத்தினர்.
மேலும் 5 ஆயிரம் தொழிலாளர்கள் சார்பில் மத்திய அரசுக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடந்தது.
காத்திருப்பு போராட்டம்
இந்த நிலையில் நிலுவையில் உள்ள 3 மாத ஊதியத்தை வழங்க கோரி யும், என்.டி.சி. பஞ்சாலைகளை இயக்க வலியுறுத்தியும், இந்தியா முழுவ தும் நேற்று தேசிய பஞ்சாலை கழக ஊழியர்கள் பஞ்சாலைகளை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் கோவை காட்டூர் பகுதியில் உள்ள என்.டி.சி. தலைமை அலுவலகம் உள்பட 5 பஞ்சாலைகளை முற்றுகையிட்டு ஊழியர்கள் நேற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள், நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும் என்று கோஷமிட்டனர். மேலும் வருகிற 4-ந் தேதி போராட்டத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல முடிவு செய்து உள்ளதாக தொழிற்சங்கத்தினர் கூறினார்.
பேச்சுவார்த்தை
இதில் ஐ.என்.டி.யூ.சி. சங்க பாலசுந்தரம், வெங்கடசாமி, ஏ.ஐ.டி.யூ.சி. சங்க முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம், சிவசாமி,
எல்.பி.எப். நாகேந் திரன், ஏ.டி.பி.கோபால், எச்.எம்.எஸ். மனோகரன், சி.ஐ.டி.யு. பத்மநாபன், ஆனந்தகுமார், எம்.எல்.எப். தியாகராஜன், என்.டி.எல்.எப். ரங்க சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் என்.டி.சி. நிர்வாகம் சார்பில் தொழிற்சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதில் ஒரு வாரத்திற்குள் நிலுவை ஊதியத்தை வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.