நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றியை பெற வேண்டும்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றியை பெற வேண்டும்;
கோவை
அனைவரும் ஒற்றுமையாக இருந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றியை பெற வேண்டும் என்று தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார்.
செயற்குழு கூட்டம்
ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் கோவை காளப்பட்டியில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்கி பேசும் போது கூறியதாவது:-
பூத் கமிட்டி அமைத்த முதல் மாவட்டம் கோவை. பூத் கமிட்டி பணிகளில் ஒரு சிலரின் பெயர்கள் விடுபட்டுள்ளது என கூறி உள்ளார்கள்.
யார் சிறப்பாக பணியாற்றுவார்கள் என்பதை அறிந்து அவர்களும் சேர்க்கப்படுவார்கள். சிறப்பாக செயல்பட வில்லை என்றால் மாற்றப்படுவார்கள்.
நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பூத் கமிட்டியினர் சிறப்பாக செயல்பட வேண்டும்.
கோவையை பொறுத்தவரை 30 லட்சத்து 84 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். 10 லட்சம் உறுப்பினர் களை சேர்க்க வேண்டும். மூன்றில் ஒரு பங்கு புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.
உதயநிதிஸ்டாலின் வருகை
உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைப்பதற்காக வருகிற 26-ந் தேதி இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கோவைக்கு வர உள்ளார்.
அவர், அன்று மாலையில் கொடிசியாவில் 25 ஆயிரம் பேர் பங்கு கொள்ள கூடிய நிகழ்ச்சியில் பேச உள்ளார்.
அடுத்த ஆண்டு 8-ந் தேதி மாற்றுக் கட்சியை சேர்ந்த பலர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைய உள்ளனர்.
9-ந் தேதி கோவையில் ஜல்லிக்கட்டு போட்டியை உதயநிதி ஸ்டாலின் தொடங்கிறார். உள்ளாட்சி தேர்தலில் நம் கவனத்தை எடுத்து செல்வோம்.
280 சாலைகளுக்கான டெண்டர் முடிய உள்ளது. அதன் பணி விரைவில் தொடங்க உள்ளது. புதிய பணிகளும் தொடங்கி வைக்கப்படும்.
100 சதவீத வெற்றி
இயக்கத்தின் இதயம் பூத் கமிட்டியின் பொறுப்பாளர்கள். கோவை மாநகராட்சியின் 100 வார்டுகள், பேரூராட்சிகள், நகராட்சிகளில் தி.மு.க. வென்றது என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
கரூரில் இருந்து கோவைக்கு தேர்தல் பணிகளை மேற்கொள்ள தி.மு.க. நிர்வாகிகள் வந்து உள்ளனர்.
அவர்களுடன் கோவை மாவட்ட தி.மு.க.வினர் ஒற்றுமையாக ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.
உள்ளாட்சியில் 100 சதவீத இடங்களை தி.மு.க. வென்றது என்ற நிலையை அடைய வேண்டும். அந்த வெற்றியை முதல்-அமைச்சரின் கரங்களில் சேர்க்க வேண்டும்.
மக்களோடு மக்களாக நின்று மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் முதல்-அமைச்சரை பெற்றுள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.