அரசு பள்ளி கணினி ஆசிரியர் பணியிடை நீக்கம்
அரசு பள்ளி கணினி ஆசிரியர் பணியிடை நீக்கம்;
கோவை
மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய அரசு பள்ளி கணினி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கணினி ஆசிரியர்
கோவையை அடுத்த வெள்ளலூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு கணினி ஆசிரியராக விஜய் ஆனந்த் (வயது46) பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி விட்டது.
இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அந்த பள்ளியில் படிக்கும் பிளஸ்-1 மற்றும் பிளஸ-2 மாணவிகளின் வாட்ஸ்-அப்பில் ஆபாசமாக குறுஞ்செய்தி மற்றும் புகைப்படங்கள் அனுப்பியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் பலமுறை புகார் அளித்தனர்.
அதன்பேரில் குழந்தைகள் அமைப்பு நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்து அவர்கள் மாணவிகளிடம் உளவியல் ரீதியாக ஆலோசனை வழங்கி வந்ததாக தெரிகிறது.
இதற்கிடையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து சக மாணவிகளுடன் சேர்ந்து நேற்று பள்ளியின் முன்பு திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கீதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன்பேரில் ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
ஆபாச குறுஞ்செய்தி
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் கூறும்போது, எங்கள் பள்ளி ஆசிரியர்கள் ஒருவர் உங்களிடம் பேசும்போது நல்ல தொடுதல், தவறான தொடுதல் எவ்வாறு இருக்கும் என்று எங்களுக்கு சொல்லி கொடுத்து உள்ளனர். ஆனால் கணினி ஆசிரியர் வகுப்பின் போது மாணவிகளின் உடலை தொட்டு பேசுவது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டார்.
மேலும், வீடியோ கால் செய்து டீ-சர்ட் போடுங்கள் என கூறுவார்.
வாட்ஸ் அப்பில் ஆபாச தகவல் மற்றும் புகைப்படங்களை அனுப்பி வைப்பார். எனவே அந்த ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
பணியிடை நீக்கம்
இந்த விவகாரத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கீதா, மாணவிகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி பாலியல் தொல்லை அளித்த கணினி ஆசிரியர் விஜய் ஆனந்த்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதற்கிடையில், கணினி ஆசிரியர் கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு வரவில்லை என கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.