துப்புரவு பணியாளரை மிரட்டிய சுகாதார ஆய்வாளர்
துப்புரவு பணியாளரை மிரட்டிய சுகாதார ஆய்வாளர்;
கோவை
யாராக இருந்தாலும் தொலைத்து விடுவேன் என துப்புரவு பணியா ளரை, சுகாதார ஆய்வாளர் மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பணி வருகை பதிவேடு
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 92-வது வார்டில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருபவர் ஜெயக்குமார். இவர், கடந்த டிசம்பர் மாதம் பணியாற்றியதற்கான வருகை பதிவேடு கடிதம் வேண்டும் என்று சுகாதார ஆய்வாளர் பரமசிவத்திடம் கேட்டுள்ளார்.
ஆனால் அவர் கடிதம் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஜெயக்குமார், பா.ஜனதா நிர்வாகி பழனிச்சாமி என்பவருடன் சென்று பரமசிவத்திடம் கடிதம் கேட்டுள்ளார்.
அப்போது அங்கு நடந்த சம்பவம் வீடியோவாக எடுக்கப்பட்டது. அது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விசாரணை
அந்த வீடியோவில் சுகாதார ஆய்வாளர் பரமசிவம், என்னை போல் ஒரு பைத்தியத்தை இந்த உலகில் எங்கும் பார்க்க முடியாது.
இங்கு வரும் அனைவரும் என்னை பொறுத்தவரை பைத்தியம். வீடியோ எடுத்துக்கொள்.
நீயா? நானா? என்று பார்ப்போம். யாராக இருந்தாலும் தொலைத்து கட்டி விடுவேன் என்று கூறி அருகில் இருந்த உருட்டுக்கட்டையை எடுத்து மிரட்டல் விடுக்கும் வகையில் பேசுகிறார்.
முடிவில் நான் சாவதாக இருந்தாலும், 10 பேரை கொன்றுவிட்டு தான் சாவேன் என்று பேசும் காட்சி பதிவாகி உள்ளது.
இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளரிடம் பழனிச்சாமி புகார் மனு கொடுத்தார்.
இந்த சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.