சிறந்த திட்ட அறிக்கை கொடுத்தால் ரூ.5 லட்சம் பரிசு

திட, திரவ கழிவுகளை கையாளுவது குறித்து சிறந்த திட்ட அறிக்கை கொடுக்கும் நபருக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி அறிவித்தார்.;

Update:2021-12-24 22:33 IST
பொள்ளாச்சி

திட, திரவ கழிவுகளை கையாளுவது குறித்து சிறந்த திட்ட அறிக்கை கொடுக்கும் நபருக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி அறிவித்தார்.

புதிய தொழில்நுட்பங்கள்

தூய்மை பாரத திட்டத்தின் மூலம் பொது கழிப்பிடம் மற்றும் தனி நபர் கழிப்பிடம் கட்டி கொடுக்கப்படுகிறது. இதை தவிர வீடுகள், வணிக நிறுவனங்களிடம் இருந்து குப்பைகள் பெறப்பட்டு மக்காத, மக்கும் குப்பைகள் என பிரித்து எடுக்கப்படுகிறது. பின்னர் உரம் தயாரித்தல், பயோ மெட்ரிக் மூலம் கியாஸ் உற்பத்தி செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் பிளாஸ்டிக் கழிவுகள் மறு சுழற்சிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் குப்பைகள், கழிவுகள் இல்லாத நகரமாக பொள்ளாச்சியை மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே கையாளப்படும் தொழில்நுட்பங்களுக்கு பதிலாக புதுமையான தொழில்நுட்பங்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான திட்ட அறிக்கையை தயாரிக்க போட்டி அறிவிக்கப்பட்டு உள்ளது. 

ரூ.5 லட்சம் பரிசு

அதன்படி பொள்ளாச்சி நகராட்சியில் தூய்மை பாரதம்-2.0 திட்டத்தின் கீழ் திட, திரவ கழிவுகளை கையாளுவது குறித்து சிறந்த தொழில்நுட்பங்கள் மற்றும் திட்ட அறிக்கையை சமர்பித்தால் மாநில அளவில் முதல் பரிசாக ரூ.5 லட்சமும், 2-வது பரிசாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரமும், 4-ம் பரிசாக ரூ.1 லட்சமும், 5-வது பரிசாக ரூ.75 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்த கூடுதல் தகவல்களை தூய்மை பாரத திட்ட இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் திடக்கழிவு மற்றும் திரவ கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வரைவு திட்ட அறிக்கைகளை சமர்பிக்கலாம். இந்த தகவலை நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்