ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

ஆழியாறு பூங்கா பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.;

Update:2021-12-24 22:33 IST
பொள்ளாச்சி

ஆழியாறு பூங்கா பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.

காலி செய்ய நோட்டீசு

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை பூங்கா முன்பு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 12 கடைகள் உள்ளன. இந்த கடைகள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏலம் விடப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ஒப்பந்த காலம் முடிந்ததால் மறுஏலம் விடப்பட உள்ளது. இதையொட்டி கடைகளை காலி செய்யுமாறு வியாபாரிகளுக்கு, பொதுப்பணித்துறை மூலம் நோட்டீசு வழங்கப்பட்டது. 

இதையடுத்து அவர்கள் கடைகளை காலி செய்தனர். இதற்கிடையில் பூங்கா முன்பு போடப்பட்டு உள்ள சாலையோர கடைகளால் வியாபாரம் பாதிக்கப்படுகிறது, லட்சக்கணக்கில் பணம் கட்டி ஏலம் எடுத்தும் எந்த பயனும் இல்லை, அந்த கடைகளை அகற்ற வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தினர். 

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இதையடுத்து நேற்று காலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு பொதுப்பணித்துறை, வருவாய் துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் பேரூராட்சி துறை அதிகாரிகள் வந்தனர். இதையொட்டி அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.இதற்கு சாலையோர வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

பின்னர் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் லீலாவதி, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் உமாமகேஸ்வரி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை பேச்சுவார்த்தை நடத்தியும் சமரசம் ஏற்படவில்லை. எனினும் அதிகாரிகள் கடைகளை அகற்றி லாரியில் ஏற்றினர். 

9 கடைகளுக்கு மறு ஏலம்

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ஆழியாறு பூங்கா பகுதியில் உள்ள 12 கடைகளில் ஒரு கடை தொடர்பாக கோர்ட்டில் வழக்கு உள்ளது. 2 கடைகளுக்கு மார்ச் மாதம் வரை தவணை காலம் உள்ளது. 

மீதமுள்ள 9 கடைகளுக்கு வருகிற 29-ந் தேதி மறுஏலம் நடைபெறுகிறது. இதற்கிடையில் சாலையோரத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக அமைக்கப்பட்டு இருந்த கடைகள் அகற்றப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்