கிணத்துக்கடவு
குறிச்சி-குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆத்து பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு, குறிச்சி, குனியமுத்தூர் ஆகிய பகுதிகளுக்கு ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக 24 மணி நேர தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நேற்று கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழ் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கோவை-பொள்ளாச்சி சாலையோரம் தரையில் பதிக்கப்பட்டு இருந்த குறிச்சி-குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் திடீரென விரிசல் ஏற்பட்டது. இதனால் சாலையில் தண்ணீர் ஆறாக ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதி அடைந்தனர். இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் விரைந்து வந்த அதிகாரிகள் தண்ணீர் வினியோகத்தை நிறுத்தி பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டி குழாயை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். குடிநீர்வாரிய அதிகாரிகள் கூறும்போது, திடீரென மின்தடை ஏற்பட்டதால் அழுத்தம் காரணமாக குழாயில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதை சரி செய்ய குழாயில் உள்ள தண்ணீரை வெளியேற்றினால் மட்டுமே முடியும். அதற் கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றனர்.