அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த மருத்துவ முகாம் பாதியில் நிறுத்தம்
பொள்ளாச்சி அருகே அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அமுல்கந்தசாமி தொடங்கி வைத்த மருத்துவ முகாம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதுதொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் மீது சப்-கலெக்டரிடம் புகார் கொடுக்கப்பட்டது.;
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அமுல்கந்தசாமி தொடங்கி வைத்த மருத்துவ முகாம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதுதொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் மீது சப்-கலெக்டரிடம் புகார் கொடுக்கப்பட்டது.
மருத்துவ முகாம் நிறுத்தம்
பொள்ளாச்சி அருகே அர்த்தநாரிபாளையம் அரசு பள்ளியில் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இதற்கு ஆனைமலை ஒன்றிய குழு தலைவர் சாந்தி கார்த்திக் தலைமை தாங்கினார். முகாமை அமுல்கந்தசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். பின்னர் அங்கிருந்து அவர் சென்ற பிறகு திடீரென மருத்துவ முகாம் நிறுத்தப்பட்டது. மேலும் முகாமிற்கு வந்த டாக்டர்கள், செவிலியர்கள் திரும்பி சென்றனர்.
இதை அறிந்த அமுல்கந்தசாமி எம்.எல்.ஏ., பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
காலதாமதம்
அர்த்தநாரிபாளையத்தில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு வருமாறு எனக்கு தலைமை மருத்துவர் அழைப்பு விடுத்தார். அதன்பேரில் நிகழ்ச்சிக்கு இன்று(நேற்று) காலை 8.30 மணிக்கு சென்றேன்.
அப்போது அர்த்தநாரிபாளையம் ஊராட்சி தலைவர் குலோத்துங்கனுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டு உள்ளதா? என்று கேட்டேன். அதற்கு அவர் வருவார் என்று டாக்டர்கள் பதில் கூறினார்கள். அவருக்காக சுமார் 30 நிமிடம் காத்திருந்து, காலதாமதம் ஏற்பட்டதால் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று முகாமை தொடங்கி வைத்து விட்டு வந்தேன்.
நோயாளிகள் பாதிப்பு
அதன்பிறகு ஊராட்சி தலைவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வந்து முகாமை யாரை கேட்டு தொடங்கினீர்கள் என்றுக்கூறி டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்களை வெளியே அனுப்பி கட்டிட கதவை பூட்டி விட்டனர். இதனால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
அரசு அறிவித்த திட்டத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட அர்த்தநாரிபாளையம் ஊராட்சி தலைவர் குலோத்துங்கன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை தொடர்ந்து நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
அப்போது ஆனைமலை ஒன்றிய குழு தலைவர் சாந்தி கார்த்திக், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கார்த்திக் அப்புசாமி, ஜி.கே.சுந்தரம், மாவட்ட கவுன்சிலர் சக்திவேல், கோவை புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் அன்னூர் சரவணன், கம்பாலப்பட்டி ஊராட்சி தலைவர் ராஜ்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
விடியாத அரசு
இதையடுத்து அமுல்கந்தசாமி எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் தி.மு.க.வை மக்கள் நிராகரித்து விட்டனர். அர்த்தநாரிபாளையம் ஊராட்சி தலைவர் குலோத்துங்கன் தி.மு.க.வை சேர்ந்தவர். அவர் தனது ஆதரவாளர்களுடன் சென்று டாக்டர்களையும், செவிலியர்களையும் மிரட்டி அங்கிருந்து அனைவரையும் வெளியேற்றி கதவை மூடி உள்ளார்.
பொதுமக்களுக்கு சேவை செய்ய நாங்கள் வந்து உள்ளோம். இந்த பிரச்சினை தொடர்பாக சப்-கலெக்டரிடம் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கோதவாடியில் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ.விடம் தி.மு.க.வினர் தகராறு செய்தனர். விடியல் அரசு என்று சொல்லி விடியாத அரசாக தி.மு.க. நடந்து வருகிறது. இந்த போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.