தினத்தந்தி புகாா் பெட்டி

தினத்தந்தி புகாா் பெட்டி;

Update:2021-12-25 02:17 IST
சாக்கடை கால்வாய் அடைப்பு
ஈரோடு மாணிக்கம்பாளையம் வாரச்சந்தை ரோட்டு ஓரத்தில் சாக்கடை கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் புற்கள் வளர்ந்து அடைப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் மழை பெய்தால் கழிவுநீர் நிரம்பி வெளியேறி ரோட்டில் ஓடுகிறது. எனவே சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் சாக்கடை கால்வாய் அடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பார்களா?
அருள்மொழி, ஈரோடு.

தூர்வார வேண்டும்
ஈரோடு வீரப்பன்சத்திரம் திரு.வி.க. வீதியில் உள்ள சாக்கடைகள் முறையாக தூர்வாரப்படவில்லை.  தூர்வாரினாலும், அந்த கழிவுகளை அள்ளாமல் அப்படியே விட்டு விட்டு சென்று விடுகிறார்கள். இதனால் அந்த கழிவுகள் மீண்டும் சாக்கடைக்குள் விழுந்து விடுகின்றன. இதன்காரணமாக அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. எனவே சாக்கடையை தூர்வாரவும், தூர்வாரிய சாக்கடை கழிவுகளை அகற்றவும் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம்  நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், ஈரோடு.

பழுதடைந்த பள்ளி கட்டிடம்(படம்)
கவுந்தப்பாடி அருகே சலங்கபாளையத்தில் பவானி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கூட கட்டிடம் பழுதடைந்த நிலையில் பயன்படுத்தப்படாமல் உள்ளது. ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் முன்பு இந்த பழைய கட்டிடத்தை இடித்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.
மாணவ-மாணவிகள், சலங்கபாளையம்.



மின் கம்பியில் உரசும் மரக்கிளைகள்
அந்தியூர் காவலர் குடியிருப்பு அருகே தெரு விளக்கு ஒன்று உள்ளது. அந்த மரத்தின் அருகே பெரிய மரம் ஒன்று வளர்ந்து உள்ளது. அந்த மரத்தின் கிளைகள் மின் கம்பிகளில் உரசிக்கொண்டு உள்ளது. இதனால் அந்த பகுதியில் மின் தடை ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் மின் கம்பியில் இருந்து தீப்பொறி ஏற்பட்டு தீ விபத்து ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளது. எனவே மின் கம்பிகளை உரசிக்கொண்டு இருக்கும் மரக்கிளைகளை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ரவீந்திரன், புதுப்பாளையம்.

நோய் பரவ வாய்ப்பு
பவானி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவ வாய்ப்பு உள்ளது. மாணவிகளின் நலன் கருதி உடனே சாக்கடை அடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவிகள், பவானி.

ஆபத்தான மின்கம்பம்
குருவரெட்டியூர் ஒரியகணவனூர் காலனியில் மின்கம்பம் உள்ளது. இதிலுள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் பேராபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடனே அந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு் வேறு மின்கம்பம் நட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.
எஸ்.பெருமாள், ஒரியகணவனூர் காலனி.

மேலும் செய்திகள்