மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கூடம் அருகே மின்மாற்றி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கூடம் அருகே மின்மாற்றி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.;
ஈரோடு
ஈரோடு காளைமாடு சிலை அருகே மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தின் நுழைவு வாயில் பகுதியில் மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் மின்மாற்றி அமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த 20-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளிக்கூடம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஈரோடு சூரம்பட்டி போலீசார் விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறும்போது, ‘பள்ளிக்கூடம் அருகில் மின்மாற்றி அமைத்தால் எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சற்று தொலைவிலோ அல்லது வேறு இடத்திலோ மின்மாற்றி அமைக்க வேண்டும்’ என்றனர்.
அதற்கு போலீசார், ‘உங்கள் கோரிக்கை குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே நீங்கள் அனைவரும் இங்கிருந்து கலைந்து செல்லுங்கள்,’ என்றனர். அதை ஏற்றுக்கொண்ட மாணவர்களின் பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.