ஓடும் பஸ்சில் வாலிபரிடம் பணம் திருடிய சென்னை பெண்கள் 2 பேர் கைது
ஓடும் பஸ்சில் வாலிபரிடம் பணம் திருடிய சென்னை பெண்கள் 2 பேரை போலீசாா் கைது செய்தனா்.;
ஈரோடு
ஈரோடு அசோகபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 36). இவர் தனது மனைவி கலைச்செல்வியுடன் ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து பன்னீர்செல்வம் பூங்கா செல்வதற்காக டவுன் பஸ்சில் ஏறினார். அப்போது அவர் அருகே ஒரு பெண் கைக்குழந்தையுடன் நின்று கொண்டிருந்தார். திடீரென அந்த பெண் ராஜேந்திரன் சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.200-ஐ நைசாக திருடி அருகில் நின்று கொண்டிருந்த மற்றொரு பெண்ணிடம் கொடுத்தார். பின்னர் அந்த 2 பெண்களும் வேகமாக பஸ்சை விட்டு இறங்கினர்.
இதை கவனித்த கலைச்செல்வி தன்னுடைய கணவரிடம் கூறினார். உடனே அவர் கூச்சலிட்டார். இதைத்தொடர்ந்து சக பயணிகள் அந்த 2 பெண்களையும் பிடித்து ஈரோடு டவுன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், ‘அவர்கள் சென்னை மெரினா பீச் பகுதியை சேர்ந்த ரோஷினி (39), வீரலட்சுமி (32),’ என தெரியவந்தது.
மேலும் அவர்கள் 2 பேரும் தோழிகள் என்பதுடன், அவர்களுடைய முக்கிய தொழிலே பஸ் பயணிகளிடம் பணத்தை திருடுவது என்பதும், இவர்கள் 2 பேர் மீதும் ஏற்கனவே சென்னையில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பதும் தெரிந்தது. இதைத்தொடர்ந்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரோஷினி, வீரலட்சுமி ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவையில் உள்ள பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்