கோதவாடி குளத்துக்கு பி.ஏ.பி. தண்ணீர் நிறுத்தம்
முழு கொள்ளளவை எட்டியதால் கோதவாடி குளத்துக்கு பி.ஏ.பி. தண்ணீர் நிறுத்தப்பட்டு உள்ளது.;
கிணத்துக்கடவு
முழு கொள்ளளவை எட்டியதால் கோதவாடி குளத்துக்கு பி.ஏ.பி. தண்ணீர் நிறுத்தப்பட்டு உள்ளது.
கூடுதலாக பி.ஏ.பி. தண்ணீர்
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே கோதவாடியில் 152 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. இந்த குளத்திற்கு மழையால் அவ்வப்போது தண்ணீர் வந்தாலும், முழு கொள்ளளவை இதுவரை எட்டியது இல்லை. கடந்த 30 ஆண்டுகளாக பலமுறை பி.ஏ.பி. வாய்க்காலில் இருந்து உபரிநீர் வந்தும், குளம் நிரம்பாமல் குட்டை போலவே காட்சியளித்தது.
இந்தநிலையில் கோதவாடி குளம் பாதுகாப்பு அமைப்பினர், விவசாயிகள், தன்னார்வலர்கள் இணைந்து கரைகளை சீரமைத்து குளத்திற்கு பி.ஏ.பி. வாய்க்காலில் இருந்து கூடுதல் தண்ணீர் கேட்டு தமிழக அரசிடம் மனு கொடுத்தனர். இதனை பரிசீலனை செய்து வடசித்தூர், செட்டிபாளையம் ஆகிய வழிகளில் உள்ள பி.ஏ.பி. வாய்க்கால்களில் இருந்தும் உபரி நீரை கோதவாடி குளத்திற்கு கொண்டுவர தமிழக அரசு அனுமதி வழங்கியது.
முழு கொள்ளளவை எட்டியது
இதையடுத்து கடந்த 40 நாட்களாக கோதவாடி குளத்திற்கு பி.ஏ.பி. வாய்க்காலில் இருந்து இரவு, பகலாக கோதவாடி குளத்திற்கு தண்ணீர் தொடர்ந்து வந்தது. தற்போது முழு கொள்ளளவான 11.74 மில்லியன் கன அடியை எட்டி குளம் நிரம்பி தண்ணீர் மறுகால் பாய்ந்தது. ஆண்டுக்கணக்கில் கோதவாடி குளம் எப்போது நிரம்பும் என்று எதிர்பார்த்த விவசாயிகள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் குளம் நிறைந்ததை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
முழு கொள்ளளவை எட்டியதால் குளத்தில் பி.ஏ.பி வாய்க்காலில் இருந்து குளத்திற்கு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கோதவாடி குளத்திற்கு நீண்ட நாட்களாக விவசாயிகள் மற்றும் தன்னார்வலர்கள் கூடுதல் தண்ணீர் கேட்டு கொடுக்க முடியாமல் இருந்தது.
தட்டுப்பாட்டுக்கு வாய்ப்பு இல்லை
இதற்கு காரணம், கடந்த பல ஆண்டுகளாக ஓரளவு மழை பெய்தாலும் அந்த தண்ணீர் அணைகளில் தேக்கப்பட்டு விவசாய பணிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு வரலாறு காணாத மழை வனப்பகுதியில் பெய்ததால் அங்குள்ள அணைகளுக்கு அதிகளவு தண்ணீர் வரத்து வந்தது. இதனால் அனைத்து அணைகளும் நிரம்பியது. எனவே பல பகுதியை சேர்ந்த விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் தேவையில்லை என்று கூறி அந்தந்த பகுதியில் உள்ள குளம், குட்டைகளில் அந்த தண்ணீரை விட்டு நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அதன் அடிப்படையில் கோதவாடி குளத்திற்கு கூடுதல் தண்ணீர் விடப்பட்டதால், முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இதனால் தற்போது தண்ணீர் நிறுத்தப்பட்டு உள்ளது. தற்போது தேங்கி உள்ள தண்ணீரால் அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்த பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு வர வாய்ப்பில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.