தொற்று நோய் பரவும் அபாயம்
மருதமலை பஸ் நிலையம் எதிரே சாலையோரத்தில் சாக்கடை கால்வாய் அமைக்க குழி தோண்டப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களாக பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைகின்றனர். மேலும் அந்த குழியில் கழிவுநீர் தேங்குவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே சாக்கடை கால்வாய் பணியை தொடங்க வேண்டும் அல்லது குழியை மூட வேண்டும்.
பரமேஸ்வரன், மருதமலை.
பராமரிப்பின்றி கிடக்கும் கட்டிடம்
கோத்தகிரி அருகே பெட்டட்டி பகுதியில் அங்கன்வாடி மைய கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் உரிய பராமரிப்பின்றி பூட்டி வைக்கபட்டு இருக்கிறது. இதன் வளாகத்தில் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளது. மேலும் பயன்படுத்தி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. அதனை மதுப்பிரியர்கள் திறந்தவெளி பாராக பயன்படுத்தி வருகின்றனர். எனவே இந்த கட்டிடத்தை பராமரித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலன், பெட்டட்டி.
கால்நடைகள் தொல்லை
கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையோரத்தில் கட்டப்பெட்டு பகுதியில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடைக்குள் எப்போதும் கால்நடைகள் நின்று கொண்டு இருப்பதால் பயணிகள் பஸ்சுக்காக வெயில், மழையில் காத்து நிற்க வேண்டி உள்ளது. எனவே அங்கு கால்நடைகள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லோகநாதன், கட்டபெட்டு.
விபத்தில் சிக்கும் வாகனங்கள்
கோவை ரெயில் நிலையத்தில் இருந்து லங்கா கார்னர் நோக்கி செல்லும் சாலையின் வலதுபுறம் கான்கிரீட் கலவை குவித்து வைக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக சென்று வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, கான்கிரீட் கலவையை அகற்ற வேண்டும்.
சந்திரன், உக்கடம்.
தெருநாய்கள் தொல்லை
கோவை சுந்தராபுரம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. அவை சாலையின் குறுக்கே ஓடுவதால், அந்த சமயத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் அந்த வழியாக நடந்து செல்பவர்களையும் தெருநாய்கள் துரத்தி சென்று கடிக்க முயல்கின்றன. இதனால் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே அங்கு தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அருண்குமார், குறிச்சி.
சுகாதார சீர்கேடு
கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள செங்காடு பகுதியில் சாலையில் குப்பைகள் கொட்டப்பட்டு இருக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் நிலை காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, அங்கு குப்பைகள் கொட்டாமல் இருக்க நிரந்தர தீர்வு காண வேண்டும்.
சதாசிவம், செங்காடு.
விஷ ஜந்துக்கள் நடமாட்டம்
கோவை அசோகபுரம் ஊராட்சி 2-வது வார்டு பகுதியில் ஆங்காங்கே முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளது. இதனால் அங்கு பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். எனவே புதர் செடிகளை வெட்டி அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.
வடிவேல், அசோகபுரம்.
தெருவிளக்குகள் ஒளிரவில்லை
கோவை ஒப்பணக்கார வீதியில் தெருவிளக்குகள் பழுதடைந்து சரிவர ஒளிருவது இல்லை. இதனால் இரவில் சில இடங்கள் இருள் சூழ்ந்து காணப்படுகின்றன. இதன் காரணமாக அந்த வழியாக சென்று வரும் பொதுமக்கள அச்சப்படுகிறார்கள். எனேவ தெருவிளக்குகளை சரி செய்து, முறையாக ஒளிர வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சோனியா, கோவை.
வீணாகும் தண்ணீர்
கோவை உப்பிலிபாளையம் அவினாசி பாலம் சிக்னலில் இருந்து இடதுபுறமாக ஆடிஸ் வீதி செல்லும் சாலையோரம் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. அதை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜா, கோவை.
குண்டும், குழியுமான சாலை
கோவை பாலசுந்தரம் சாலையில் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அருகில் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பழுதடைந்த அந்த சாலையில் உள்ள குழிகளை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
முஸ்தபா, கோவை.