அம்மாபேட்டை அருகே பட்டப்பகலில் துணிகரம்: ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு; தேவாலயத்துக்கு சென்ற சிறிது நேரத்தில் மர்ம நபர்கள் கைவரிசை
அம்மாபேட்டை அருகே கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட தேவாலயத்துக்கு சென்ற சிறிது நேரத்தில் ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 10 பவுன் நகைகளை துணிகரமாக திருடி சென்று உள்ளனர்.;
அம்மாபேட்டை
அம்மாபேட்டை அருகே கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட தேவாலயத்துக்கு சென்ற சிறிது நேரத்தில் ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 10 பவுன் நகைகளை துணிகரமாக திருடி சென்று உள்ளனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஆசிரியர்
அம்மாபேட்டை அருகே உள்ள பெரும்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சூசை கண்ணன் (வயது 48). இவர் சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவருடைய மனைவி லூர்து புஷ்பம். இவர்களுடைய மகன் ஜான்சன். சூசை கண்ணனின் தாய் மாரியம்மாள்.
தேவாலயத்துக்கு...
நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் காலை 8.30 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு சூசை கண்ணன் தனது குடும்பத்தினருடன் அருகே உள்ள சின்னப்பள்ளம் தேவாலயத்தில் நடந்த பிரார்த்தனையில் கலந்து கொள்ள சென்றார்.
பிரார்த்தனை முடிந்த பின்னர் அவர்கள் அனைவரும் மீண்டும் 9.40 மணிக்கு வீட்டுக்கு வந்தனர்.
நகை திருட்டு
அப்போது வீட்டின் முன்புற கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் பதற்றத்துடன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டனர். பின்னர் பீரோவை பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகைகளை காணவில்லை. கிறிஸ்துமஸ் பண்டிகை பிரார்த்தனையில் கலந்து கொள்வதற்காக சூசை கண்ணன் தனது குடும்பத்தினருடன் தேவாலயத்துக்கு சென்ற சிறிது நேரத்தில் மர்ம நபர்கள் தங்கள் கைவரிசையை காட்டியது தெரியவந்தது.
மோப்ப நாய் வீரா
இதுபற்றி அறிந்ததும் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் மோப்ப நாய் வீரா சம்பவ நடந்த வீட்டுக்கு வரவழைக்கப்பட்டது. பின்னர் வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி மோப்ப நாய் வீரா அங்குள்ள பவானி ரோட்டில் சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. அதுமட்டுமின்றி கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு பதிவான ரேகைகளை பதிவு செய்தனர்.
பரபரப்பு
இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேவாலயத்துக்கு சென்று வந்த 1 மணி நேரத்தில், அதுவும் பட்டப்பகலில் மெயின் ரோட்டில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.