35 நாட்களுக்கு பிறகு பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104 அடியில் இருந்து குறைந்தது
கடந்த 35 நாட்களுக்கு பிறகு பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104 அடியில் இருந்து குறைந்தது.;
பவானிசாகர்
கடந்த 35 நாட்களுக்கு பிறகு பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104 அடியில் இருந்து குறைந்தது.
மண் அணை
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது.
நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக உள்ளன. அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அதுமட்டுமின்றி ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை விளங்குகிறது.
35 நாட்களாக...
நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்ததால் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 20-ந் தேதி மதியம் 2 மணிக்கு 104 அடியை எட்டியது.
இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு குறைந்ததால் அணைக்கு வரும் நீா்வரத்தும் குறைந்தது. அதே வேளையில் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டதால், அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வந்தது.
இதன்காரணமாக அணையின் நீர்மட்டம் நேற்று அதிகாலை 4 மணி அளவில் 103.99 அடியாக குறைந்தது. அணைக்கு வினாடிக்கு 683 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 600 கன அடியும், கீழ் பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது.
கடந்த 35 நாட்களுக்கு பிறகு அணையின் நீர்மட்டம் 104 அடிக்கு கீழ் குறைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.