காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1,858 வாகனங்கள் இன்று ஏலம் - போலீஸ் துறை தகவல்

காஞ்சீபுரம் மாவட்ட 14 போலீஸ் நிலையங்களில் உள்ள யாரும் உரிமைகோராத 1,858 வாகனங்கள் இன்று ஏலம் விடப்படுகிறது. இதுகுறித்து காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2021-12-26 08:10 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்திற்குட்பட்ட காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டத்திற்குட்பட்ட 14 போலீஸ் நிலையங்களில் உள்ள யாரும் உரிமைகோராத 1,817 இருசக்கர வாகனங்கள், 15 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 26 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 1,858 வாகனங்கள் உள்ளன.

இந்த வாகனங்களின் உரிமையாளர்களை கண்டுபிடித்து வாகனங்களை ஒப்படைக்க காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவிட்டும் வாகனங்களின் உரிமையாளர்களை கண்டுபிடிக்க இயலவில்லை என்பதாலும், வாகனங்களை யாரும் உரிமை கோரவில்லை என்பதாலும், தொடர்ந்து போலீஸ் நிலையங்களில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

யாரும் உரிமை கோராத போலீஸ்நிலையங்களில் உள்ள வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ்துறை இயக்குனர் உத்தரவிட்டதன் பேரில் இந்த வாகனங்களை ஏலமிட்டு அதன்மூலம் வரும் தொகையை அரசு கணக்கில் செலுத்த ஏதுவாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள போலீஸ் சூப்பிரண்டு, காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டருக்கு வேண்டுகோள் விடுத்ததன் பேரில், உரிமைகோரப்படாத 1,858 வாகனங்கள் குறித்து கடந்த 14-ந்தேதி நாளிட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வாகனங்கள் அனைத்தும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காஞ்சீபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஏலமிட ஏதுவாக காட்சிப்படுத்தப்படவுள்ளது.

எனவே, பொதுமக்கள் யாரேனும் தங்களது வாகனம் ஏதேனும் காணவில்லையெனில் சம்பந்தப்பட்ட வாகன ஆவணத்துடன் வந்து ஆயுதப்படை மைதானத்தில் காட்சிப்படுத்தப்படவுள்ள வாகனத்துடன் சரிபார்த்துக்கொள்ள மேலும் ஒருவாய்ப்பாக போலீஸ்துறை சார்பாக கேட்டுகொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்