செங்கல்பட்டில் தேவாலயத்தில் நகை, பணம் திருட்டு
செங்கல்பட்டு தேவாலயத்தில் பெண்ணிடம் இருந்து நகை, பணம் திருடிய மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்.;
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு புனித சூசையப்பர் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நேற்று காலை 10 மணியளவில் ஏராளமானோர் சிறப்பு ஆராதனையில் ஈடுபட்டனர். பிரான்சிஸ் என்பவர் தனது குடும்பத்தினருடன் இருக்கையில் அமர்ந்து உறவினர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது பிரான்சிஸ் மனைவி கிருபா தனது மணிபர்ஸை பக்கத்து இருக்கையில் வைத்துவிட்டு உறவினர்களுடன் பேசி கொண்டிருந்தார்.
அதில் ரூ.7 ஆயிரத்து 500 மற்றும் 2 பெண் குழந்தைகளின் தலா 3 பவுன் தங்க நகைகள், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஸ்மார்ட்கார்டு மற்றும் ஏ.டி.எம். கார்டுகள் உள்ளிட்டவை இருந்தது. இதுகுறித்து தேவாலய நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டு கண்காணிப்பு கேமரா காட்சிகளை பரிசோதித்த போது மர்மநபர் ஒருவர் மணிபர்சை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதுகுறித்து பிரான்சிஸ் அளித்த புகாரின் அடிப்படையில் செங்கல்பட்டு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து மர்மநபரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.