அமைச்சர் பதவியின் மீது ஆசை இல்லை
தொண்டர்கள் தான் முக்கியம் என்றும், அமைச்சர் பதவியின் மீது ஆசை இல்லை என்றும் கோவையில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேசினார்.;
கோவை
தொண்டர்கள் தான் முக்கியம் என்றும், அமைச்சர் பதவியின் மீது ஆசை இல்லை என்றும் கோவையில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேசினார்.
உறுப்பினர் சேர்ப்பு முகாம்
ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் உறுப்பினர்கள் சேர்ப்பு முகாம் காளப்பட்டியில் நேற்று நடந்தது. இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார். முகாமமை தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
கோவை விமானநிலையத்தில் இருந்து முகாம் நடக்கும் இடத்துக்கு வர ¾ மணி நேரம் ஆகும் அளவுக்கு வரவேற்பு எழுச்சியாக இருந்தது. இது போன்று வரவேற்பை பார்த்ததில்லை. கோவை மக்களுக்கு குசும்பு அதிகம் என்று சொல்வார்கள். குசும்பு மட்டுமின்றி அவ்வப்போது ஏமாற்றவும் செய்து விடுகிறார்கள். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது 2 நாட்கள் தங்கி இருந்து மாவட்டம் முழுவதும் பிரசாரம் செய்தேன். கண்டிப்பாக இங்கு 5 முதல் 6 தொகுதிகளில் வென்றுவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் எங்களை ஏமாற்றிவிட்டீர்கள்.
மீண்டும் அந்த தவறை செய்ய வேண்டாம். (அப்போது அங்கு கூடியிருந்தவர்கள், அந்த தவறை செய்யமாட்டோம் என்று கோஷமிட்டனர்.) இதை நான் நம்ப மாட்டேன். பார்ப்போம். நாடாளு மன்ற தேர்தல், அதன்முன்பாக உள்ளாட்சி தேர்தல் வருகிறது. நிச்சயம் மாவட்ட செயலாளர்கள் ஒத்துழைப்போடு வெற்றி பெறுவோம். கோவை மாவட்ட பொறுப்பாளராக முதல்- அமைச்சரால் நியமிக்கப் பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜியை, எந்த ஒரு செயலையும் எடுத்தால் செய்து முடிக்காமல் விடமாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது.
வாக்குறுதிகள் நிறைவேற்றம்
அவர் கரூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்று காட்டினார். முதல்-அமைச்சராக பதவியேற்ற பிறகு மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனாவை கட்டுப்படுத்தினார். 3-வது அலையை எதிர்கொள்ள முதல்-அமைச்சர் தலைமையில் முன்னேற்பாடுகள் தயாராக உள்ளது.
பெண்களுக்கு பஸ்களில் இலவச பயணம், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, ஆவின்பால் லிட்டருக்கு ரூ.2 குறைவு என வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஒரு தொகுதிக்கு 10 ஆயிரம்பேரை சேர்க்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் என்னிடம் கூறினார். அதன்படி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து 24 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்த்து காண்பித்தோம். தி.மு.க.வில் 2 கோடி பேரை சேர்த்து காட்ட வேண்டும் என்று மாவட்ட பொறுப்பா ளர்களுக்கு மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்து உள்ளார்.
அமைச்சர் பதவிக்கு ஆசை இல்லை
நேற்று (நேற்று முன்தினம்) முதல்-அமைச்சருடன் நான் அறிவாலயத் துக்கு சென்று கொண்டு இருந்தேன். அப்போது சாலையோரம் வெயிலில் நின்ற 2 முதியவர்களை பார்த்ததும் காரை நிறுத்துமாறு கூறிய முதல்-அமைச்சர் அவர்களை குறை கேட்டார். அப்போது அவர்கள், கடந்த 8 மாதங்களாக உங்கள் ஆட்சி மிகச்சிறப்பாக உள்ளது என்று முதல்-அமைச்சரின் தலையில் கைவைத்து கூறினார்கள். மேலும் அவர்கள் முதல்-அமைச்சருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
வருகிற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. வெற்றிக்கு ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டும். முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, அமைச்சர் செந்தில்பாலாஜி பேசும்போது விரைவில் எனக்கு அமைச்சர் அல்லது துணை முதல்-அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று பேசினார்கள். நான் அந்த மாதிரி எந்த பதவியின் மீதும் ஆசைப்படாதவன். தொண்டர்கள் தான் முக்கியம்.
என்றும் மக்கள் பணியில் உங்களோடு ஒருவனாக இருக்க வேண்டும். தி.மு.க. வுக்காக கடைசிவரை உழைக்க வேண்டும். உங்களுக்கும், முதல்- அமைச்சருக்கும் உறுதுணையாக இருந்து பாலமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். கோவை மாநகர மக்கள் தி.மு.க.வை ஏமாற்றாமல் உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
1,000 பேர் இணைந்தனர்
இதில் கோவை மாநகர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த 500 இளம்பெண்கள், 500 இளைஞர்கள் என 1,000-க்கும் மேற்பட்டோர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
இதில் முன்னாள் அமைச்சரும், தி.மு.க சொத்து பாதுகாப்பு குழு துணை தலைவருமான பொங்கலூர் பழனிச்சாமி, மாவட்ட பொறுப் பாளர்கள் முன்னாள் எம்.எல்.ஏ. நா.கார்த்திக், பையா கவுண்டர், சி.ஆர்.ராமச்சந்திரன், மருதமலை சேனாதிபதி, டாக்டர் வரதராஜன் மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயராமகிருஷ்ணன், இளைஞர் அணி மாநில துணை செயலாளர் பைந்தமிழ் பாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.