காட்டு யானை தாக்கி தொழிலாளி படுகாயம்
பேரூர் அருகே காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி படுகாயம் அடைந்தார்.;
பேரூர்
பேரூர் அருகே காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
விவசாய கூலி தொழிலாளி
கோவையை அடுத்த பேரூர் ஆலாந்துறை பட்டியார் கோவில் பகுதியை சேர்ந்தவர் மருதன் (வயது 55). விவசாய கூலி தொழிலாளி. இவருடைய மனைவி கிட்டம்மாள் (40). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். மருதன், நேற்று முன்தினம் மாலை, பட்டியார் கோவில்பதி அருகே மடக்காடு கிராமத்தில் உறவினர் வேலுச்சாமி இறந்த 3-ம் நாள் காரியத்திற்கு சென்றார்.
அங்கு நிகழ்ச்சியை முடித்துவிட்டு, இரவில் மருதன் மது அருந்தியதாக தெரிகிறது. அதன்பிறகு அவர், நள்ளிரவு 1 மணி அளவில் தர்மலிங்கம் என்பவருக்கு சொந்தமான நெல்வயல் பகுதியில் தனியாக நடந்து வந்து கொண்டு இருந்தார். அப்போது, அந்த வழியாக காட்டுயானை ஒன்று வந்தது. அதை பார்த்ததும் மருதன் அதிர்ச்சி அடைந்தார்.
காட்டு யானை தாக்கியது
இதையடுத்து அவர் சுதாரித்துக் கொண்டு தப்பி ஓடத் தொடங்கினர். அப்போது அங்குள்ள பள்ளத்தில் தவறி விழுந்து அவர் காயம் அடைந்தார். அப்போது துரத்தி வந்த காட்டுயானை மருதனை தாக்கி விட்டு அங்கிருந்து சென்றது.
இதில், இடுப்பு, மார்பு பகுதியில் காயம் அைடந்த மருதன் மயக்கம் அடைந்தார். இந்நிலையில், நேற்று காலை அங்கு கட்டுமான பணிக்கு வந்த வடமாநில தொழிலாளர்கள் பள்ளத்தில் ஒருவர் மயங்கி கிடப்பதை பார்த்து ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சிகிச்சை
அதன்பேரில் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள், மருதனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காட்டு யானை தாக்கி தொழிலாளி காயம் அடைந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எனவே காட்டு யானைகளால் யாரும் பாதிக்கப்படாமல் இருக்க வனத் துறை யினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.