தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் ஆர்வம்
ஒமைக்ரான் பரவல் காரணமாக கோவையில் தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.;
கோவை
ஒமைக்ரான் பரவல் காரணமாக கோவையில் தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கொரோனா பரவல்
கோவையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் தற்போது கொரோனா உருமாறி ஒமைக்கான் வைரஸ் பரவ தொடங்கி உள்ளது. இதன் காரணமாக தடுப்பூசி போட மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பொது இடங்களுக்கு செல்ல தடுப்பூசி கட்டாயம் என்று அரசு வலியுறுத்தி உள்ளது. இது போல் தொழிலாளர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று தொழில் நிறுவனங்கள் அறிவுறுத்தி வருகின்றன.
தடுப்பூசி முகாம்கள்
இதையொட்டி கோவை ஊரக பகுதிகளில் 403 மையங்கள், மாநகராட் சியில் 145 மையங்கள் என 548 மையங்களில் நேற்று தடுப்பூசி முகாம் நடந்தது. கோவை வி.கே.கே.மேனன் சாலை, சுங்கம் ஆரம்ப சுகாதார நிலையம், கண்ணப்பன் நகர் போலீஸ் சோதனைச் சாவடி, ஆவாரம்பாளையம் ரோடு மாநகராட்சி பள்ளி உள்பட பல்வேறு இடங்களில் நடந்த முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
மேலும் நடமாடும் மருத்துவ குழு மூலமும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-ஒமைக்ரான் பரவ தொடங்கி உள்ளதால் அனைவரும் 2 டோஸ் தடுப் பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் இன்று (நேற்று) மட்டும் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இலக்கு எட்டப்படும்
இதற்காக அமைக்கப் பட்ட முகாம்களை பயன்படுத்தி பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். 72.75 சதவீதம் பேருக்கு 2 தவணை தடுப்பூசி செலுத்தி மாநில அளவில் கோவை 2-வது இடத்தில் உள்ளது. விரைவில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாவட்டம் என்ற இலக்கு எட்டப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.