புகார் பெட்டி

புகார் பெட்டி;

Update:2021-12-26 22:27 IST
குப்பை தொட்டி வைக்கப்படுமா?

கோத்தகிரி காத்துக்குளி அருகே உள்ள கெரடா பகுதியில் சாலையேரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே சாலையோரத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும், ஒதுக்குப்புறமான இடத்தில் புதிய குப்பை தொட்டி அமைக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செந்தில்குமார், கோத்தகிரி.

சுகாதார சீர்கேடு

கோவை லங்கா கார்னர் மேம்பாலத்தின் கீழ் ரெயில்வே போலீஸ் நிலையம் அருகே ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சந்தோஷ், கோவை.

போக்குவரத்துக்கு இடையூறு

நெகமத்தில் நாகர் மைதானம் பகுதியில் சாலையோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் கடும் அவதி அடைகின்றனர். எனவே அங்கு வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்வி, நெகமம்.

கடும் துர்நாற்றம்

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். எனவே கால்வாய் அடைப்பை சரி செய்து, கழிவுநீர் சீராக செல்ல வழிவகை செய்ய வேண்டும்.

பெருமாள்சாமி, ஆவாரம்பாளையம்.

நோய் பரவும் அபாயம்

கோவை கவுண்டம்பாளையம் அருகே இடையர்பாளையம் ராமலட்சுமி நகர் 2-வது வீதியில் கழிவுநீர் கால்வாய் சரிவர கட்டி முடிக்கப்படவில்லை. இதனால் அங்கு கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. இதனால் டெங்கு உள்ளிட்ட நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே கழிவுநீர் தேங்குவதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெகநாதன், இடையர்பாளையம்.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

கோவை சின்னியம்பாளையம் அருகே அரசூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் தெருநாய்கள் குப்பைகளை சாலை வரை சிதறடித்து விடுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். மேலும் அந்த வழியாக செல்பவர்கள் துர்நாற்றத்தால் மூக்கை பொத்திக்கொண்டு நடக்கும் நிலை உள்ளது. எனவே குப்பைகளை உடனுக்குடன் அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.

சதாசிவம், சின்னியம்பாளையம்.

அடர்ந்து வளர்ந்த புதர் செடிகள்

மதுக்கரையில் குரும்பபாளையம் செல்லும் சாலையோரத்தில் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. அங்கு காட்டுப்பன்றிகள் மற்றும் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் ஆகியவை பதுங்கி இருக்கின்றன. இதனால் அந்த வழியாக நடந்து செல்ல பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். மேலும் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது சாலையை காட்டுப்பன்றிகள் திடீரென கடப்பதால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அங்குள்ள புதர் செடிகளை வெட்டி அகற்ற வேண்டும்.

பரத்வேல், மதுக்கரை.

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

பொள்ளாச்சியில் இருந்து பல்லடம், உடுமலை செல்லும் சாலைகளில் தனியார் பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள் உள்ளன. இங்கு பொள்ளாச்சி, ஆனைமலை, உடுமலை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். ஆனால் கல்லூரிக்கு வந்து செல்ல போதிய அரசு மற்றும் தனியார் பஸ்கள் இல்லை. இதனால் மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் நின்று கொண்டும், தொங்கி கொண்டும் பயணிக்கும் நிலை தொடர்கிறது. எனவே காலை, மாலை நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எஸ்.சுகன்யா, பொள்ளாச்சி.

குப்பைகளை தரம் பிரித்து போடுங்க...

கோவை சித்தாபுதூர் திருவள்ளுவர் சாலையில் மக்கும் குப்பை, மக்காத குப்பையை தனித்தனியாக பிரித்து போடுவதற்கு இடம் ஒதுக்கப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் குப்பைகளை தரம் பிரிக்காமல் சிலர் போட்டு செல்கின்றனர். எனவே குப்பைகளை தரம் பிரித்து போட மாநகராட்சி நிர்வாகத்தினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

ராஜா, கோவை.

சாலையில் பள்ளங்கள்

கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள அவினாசி பாலத்தில் இருந்து மரக்கடை செல்லும் வழியில் பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே சாலையில் உள்ள பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்பாஸ், கோவை.

தடுப்புகளால் விபத்து அபாயம்

கோவை பாலசுந்தரம் சாலையில் இருந்து பி.ஆர்.எஸ். மைதானம் செல்லும் நுழைவு வாயில் முன்பு சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்காமல் பிளாஸ்டிக் தடுப்புகள் கொண்டு மறைத்து வைத்து உள்ளனர். இதனால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து பள்ளத்தை மூடி தடுப்புகளை அகற்ற வேண்டும்.

சந்திரன், சித்தாபுதூர்.

மேலும் செய்திகள்