மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி கேரள கல்லூரி மாணவர் பலி

செல்போன் வாங்க கோவைக்கு வந்தபோது மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி கேரள கல்லூரி மாணவர் பலியானார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.;

Update:2021-12-26 22:27 IST
கிணத்துக்கடவு

செல்போன் வாங்க கோவைக்கு வந்தபோது மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி கேரள கல்லூரி மாணவர் பலியானார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.

கல்லூரி மாணவர்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சாந்தன்பாறா பகுதியை சேர்ந்தவர் அப்பாய் விக்கி. கூலி தொழிலாளி. இவருடைய மனைவி மஞ்சு. இவர்களது மகன் அமல்(வயது 23). இடுக்கியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வந்தார். 

இந்த நிலையில் அமல் புதிதாக செல்போன் வாங்க முடிவு செய்தார். அதற்காக நேற்று முன்தினம் தனது நண்பர்களான பிரதீப்(20), ரமேஷ்(24), பாதுஷா(20) ஆகியோருடன் கோவைக்கு புறப்பட்டார். அதில் அமல் மற்றும் பிரதீப் ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளிலும், ரமேஷ் மற்றும் பாதுஷா ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கிளிலும் வந்தனர்.

கார் மோதியது

மாலை 4 மணியளவில் பொள்ளாச்சி-கோவை 4 வழிச்சாலையில் கிணத்துக்கடவு அருகே வந்து கொண்டு இருந்தனர். அப்போது கோவில்பாளையத்துக்கு முன்பு உள்ள நல்லிகவுண்டன்பாளையம் பிரிவை நோக்கி கோவையில் இருந்து வந்த கார் ஒன்று சாலையை கடந்து சென்றது. அந்த சமயத்தில் அந்த வழியாக அமல் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் வந்தது. இதனால் எதிர்பாராதவிதமாக திடீரென அந்த மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. 

செல்லும் வழியில்...

இதில் அமல் மற்றும் அவருடன் பயணித்த பிரதீப் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதை கண்ட அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அமல் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். 

ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர் பிரதீப் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்