ஆழியாறு குரங்கு நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
பொள்ளாச்சி அருகே ஆழியாறு குரங்கு நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.;
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே ஆழியாறு குரங்கு நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
குரங்கு நீர்வீழ்ச்சி
பொள்ளாச்சி அருகே ஆழியாறில் குரங்கு(கவியருவி) நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கூட்டம், கூட்டமாக வந்து குவிந்தனர். அவர்கள் மகிழ்ச்சியுடன் குரங்கு நீர்வீழ்ச்சியில் ஆனந்த குளியலிட்டனர். நீண்ட நேரம் குளித்ததால் ஏற்பட்ட பசியை போக்க தாங்கள் கொண்டு வந்த வித விதமான உணவு வகைகளை அருகில் உள்ள இடங்களில் ஜாலியாக அமர்ந்து உண்டு களித்தனர்.
டிக்கெட் வழங்குவது நிறுத்தம்
இது மட்டுமின்றி ஆழியாறு மெயின்ரோட்டில் இயற்கை நிறைந்த இடங்களில் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அசம்பாவித சம்பவங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க ஆழியாறு போலீசார் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
முன்னதாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிப்பு காரணமாக ஆழியாறு சோதனைச்சாவடியில் மாலை 3.30 மணிக்கு பின்பு குரங்கு நீர்வீழ்ச்சிக்கு செல்ல டிக்கெட் வழங்குவது நிறுத்தப்பட்டது.