விபத்தில் கோழிப்பண்ணை உரிமையாளர் சாவு

மொடக்குறிச்சி விபத்தில் கோழிப்பண்ணை உரிமையாளர் பரிதாபமாக இறந்தார்.;

Update:2021-12-27 02:06 IST
மொடக்குறிச்சி
மொடக்குறிச்சி விபத்தில் கோழிப்பண்ணை உரிமையாளர் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோழிப்பண்ணை உரிமையாளர்
மொடக்குறிச்சியை அடுத்த ஆலூத்துபாளையத்தை சேர்ந்தவர் குமார் (வயது 38). திருமணம் ஆகவில்லை. இவருடைய தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் அவர் தனது தாய் லோகுமணியுடன் வசித்து வந்தார். மேலும் குமார் அப்பகுதியில் சொந்தமாக கோழிப்பண்ணை வைத்து நடத்தி வந்தார். 
நேற்று முன்தினம் இரவு மொடக்குறிச்சியில் இருந்து நஞ்சை ஊத்துக்குளிக்கு சொந்த வேலை விஷயமாக மோட்டார்சைக்கிளில் குமார் சென்று கொண்டிருந்தார். மொடக்குறிச்சி பெட்ரோல் பங்க் அருகே சாலையோரம் குடிநீர் குழாய் போடுவதற்காக குழி வெட்டி வைக்கப்பட்டிருந்தது. 
சாவு
மோட்டார்சைக்கிளில் சென்ற குமார் அந்த குழியை கவனிக்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். கீழே விழுந்த அவர் மீது அந்த வழியாக வந்த அரசு பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியது. இந்த விபத்தில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 
இதுபற்றி அறிந்ததும் மொடக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குமாரின் உடலை மீட்டு      பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

மேலும் செய்திகள்