மொடக்குறிச்சி அருகே மாயமான மாணவர் தடுப்பணையில் பிணமாக மீட்பு
மொடக்குறிச்சி அருகே மாயமான மாணவர் தடுப்பணையில் பிணமாக மீட்கப்பட்டார்.;
மொடக்குறிச்சி
மொடக்குறிச்சி அருகே மாயமான மாணவர் தடுப்பணையில் பிணமாக மீட்கப்பட்டார்.
தந்தை சாவு
மொடக்குறிச்சி அருகே உள்ள ஆலங்காட்டுவலசு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. அவருடைய மனைவி சித்ரா. இவர்களுடைய மகள் வைஷ்மதி (16), மகன் மவுனிஷ் (14).
கிருஷ்ணமூர்த்தி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். சித்ரா வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். கிருஷ்ணமூர்த்தியின் பெற்றோர் முருகன்-பாப்பாத்தி. இவர்கள் மொடக்குறிச்சி காந்திஜி வீதியில் வசித்து வருகிறார்கள். தந்தை இறந்ததால் இவர்களுடன் மவுனிசும், வைஷ்மதியும் வசித்து வந்தனர்.
மாணவர் மாயம்
வைஷ்மதி மொடக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறாள். மவுனிஷ் மொடக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 24-ந் தேதி மவுனிஷ் எழுமாத்தூர் அருகே உள்ள மேட்டுப்பாளையம் குரங்கன் பள்ளம் அணைக்கட்டுக்கு சென்று மீன்பிடித்துவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றான். ஆனால் வெகுநேரமாகியும் அவன் திரும்பி வரவில்லை.
இதனால் உறவினர்கள் மவுனிசை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவன் கிடைக்கவில்லை. இதுகுறித்து முருகன் மொடக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மவுனிசை தேடி வந்தனர்.
தடுப்பணையில் பிணம்
இந்த நிலையில் நேற்று காலை மவுனிஷ் குரங்கன் ஓடை தடுப்பணையில் பிணமாக மிதந்து கொண்டிருந்தான். இதைபார்த்த பொதுமக்கள் மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா, சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று மவுனிசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மவுனிஷ் மீன்பிடித்தபோது தடுப்பணையில் தவறி விழுந்து இறந்தானா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.