குரோம்பேட்டையில் மோட்டார் சைக்கிள்-மினி பஸ் மோதல்; 2 பேர் பலி

குரோம்பேட்டையில் மோட்டார் சைக்கிள் மீது மினி பஸ் மோதிய விபத்தில் நகை கடை ஊழியர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2021-12-27 10:07 GMT
நகை கடை ஊழியர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு ஆலங்குடியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 35). திருவள்ளூரைச் சேர்ந்தவர் சதீஷ் (32). இவர்கள் இருவரும் சென்னையில் தங்கி, குரோம்பேட்டையில் உள்ள பிரபல தனியார் நகை கடையில் விற்பனையாளர்களாக வேலை செய்து வந்தனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவில் இருவரும் வேலை முடிந்து தாங்கள் தங்கியுள்ள அறைக்கு மோட்டார்சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை சதீஷ் ஓட்டினார். அவருக்கு பின்னால் செந்தில்குமார் அமர்ந்து இருந்தார்.

2 பேர் பலி

குரோம்பேட்டை பஸ் நிலையம் அருகே ஜி.எஸ்.டி. சாலையை கடந்து செல்ல முயன்றனர். அப்போது பல்லாவரத்தில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மினி பஸ் இவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த சதீஷ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய செந்தில்குமார், குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இதுபற்றி குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி பஸ் டிரைவரான வந்தவாசியை சேர்ந்த இளையராஜா (26) என்பவரை கைது செய்தனர்.

விபத்தில் பலியான சதீசுக்கு திருமணமாகி ஒரு மகனும், 6 மாத பெண் குழந்தையும், செந்தில்குமாருக்கு திருமணமாகி 2 மகன்களும் உள்ளனர்.

மேலும் செய்திகள்