தலைக்கு மேல் ஆபத்து
கோவை நவஇந்தியா சிக்னல் அருகே பஸ் நிறுத்தம் ஒன்று உள்ளது. இதன் நிழற்குடையில் பொருத்தப்பட்டு இருந்த மின்விளக்குகள் உடைந்து, எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் தொங்கி கொண்டு இருக்கின்றன. தலைக்கு மேல் ஆபத்து காத்திருக்கும் நிலையில், அந்த நிழற்குடைக்குள் வர பயணிகள் அச்சப்படுகிறார்கள். எனவே அந்த மின்விளக்குகளை அகற்ற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துரை, கோவை.
ஒளிராத தெருவிளக்குகள்
கோவை காந்திபுரம் 9-வது வீதி தொடர்ச்சி ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பு பகுதியில் உள்ள 3 மின்கம்பங்களில் உள்ள தெருவிளக்குகள் ஒளிராமல் உள்ளன. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடக்கிறது. இதனை தடுக்கும் வகையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, தெருவிளக்குகளை ஒளிர செய்ய வேண்டும்.
ரவி, டாடாபாத்.
ஆபத்தான மின்கம்பம்
பொள்ளாச்சி ஊத்துக்காடு ரோடு பத்ரகாளி அம்மன் கோவில் பகுதியில் குடியிருப்புகள் அதிகம் உள்ளன. இந்த பகுதியில் உள்ள மின்கம்பம் ஒன்று ஆபத்தான முறையில் உள்ளது. எப்போது வேண்டுமாலும் விழும் நிலையில் காணப்படுகிறது. எனவே மின்கம்பம் விழுந்து விபத்து ஏற்படும் முன்பு, அதனை மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜா, பொள்ளாச்சி.
சாலையை கடக்க அச்சம்
பொள்ளாச்சி-உடுமலை சாலையில் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு, நெகமம் உள்பட பல்வேறு பகுதியில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக ஆஸ்பத்திரி உள்புறம், வெளிப்புறம் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. ஆனால் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே செல்லும்போது, சாலையை கடந்து செல்ல போக்குவரத்து நெரிசல் காரணமாக அச்சப்படுகின்றனர். எனவே எளிதில் சாலையை கடந்து செல்ல உதவும் வகையில் போக்குவரத்தை சீரமைக்க போலீசாரை சுழற்சி முறையில் நிரந்தரமாக பணியமர்த்த வேண்டும்.
சித்ராதேவி. பொள்ளாச்சி.
சாக்கடை கால்வாய் வசதி
ஆனைமலை பேரூராட்சிக்கு உட்பட்ட பூச்சோலை நகரில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் சாலையின் இருபுறமும் கழிவுநீர் வழிந்தோடுகிறது. அந்த கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே கழிவுநீர் தேங்குவதை தடுக்க சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.
ஜாவித், ஆனைமலை.
சுகாதார சீர்கேடு
ஆனைமலை காந்தி நகர் பகுதியில் பொதுமக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பொது கழிப்பிடம் கட்டப்பட்டு உள்ளது. ஆனால் அந்த கழிப்பிடம் முறையாக பராமரிப்பது இல்லை. மேலும் சாலையோரத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக கொட்டப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே பொது கழிப்பிடத்தை முறையாக பராமரிக்கவும், பிளாஸ்டிக் கழிவுகள் உள்பட குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முரளி, ஆனைமலை.
வேகத்தடை அமைக்கப்படுமா?
கோவை பாப்பம்பட்டி பிரிவு பாரதிபுரம், கண்ணம்பாளையம் செல்லும் சாலைகளில் அதிகளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் பாரதிபுரம் கோவில் அருகே உள்ள சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. ஆனால் அந்த இடத்தில் வேகத்தடை இல்லை. எனவே விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும்.
ரஜினி செந்தில், பாப்பம்பட்டி.
தொற்று நோய் பரவும் அபாயம்
கோவை எஸ்.ஐ.எச்.எஸ். காலனியில் இருந்து இருகூர் செல்லும் மகாத்மா காந்தி சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. எனவே சாலையில் கழிவுநீர் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகேஷ், கோவை.
குண்டும், குழியுமான சாலை
போத்தனூர் காந்திஜி ரோடு மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் சாலையை ஆக்கிரமித்து குப்பை தொட்டி வைக்கப்பட்டு உள்ளது. அங்கு குப்பைகள் சரிவர அள்ளப்படாமல் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே இதற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெய், போத்தனூர்.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
இடிகரை அருகே கிருஷ்ணாபுரம் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் ஒன்று உள்ளது. இந்த கால்வாயில் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்து காணப்படுகிறது. இதனால் அங்கு கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே அந்த கால்வாயை சூழ்ந்துள்ள முட்புதர்களை வெட்டி அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.
அபினவ், இடிகரை.
கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
காந்திபுரத்தில் இருந்து தடாகம் செல்லும் வழியில் குறைந்த எண்ணிக்கையிலேயே டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். எனவே அந்த வழித்தடத்தில் கூடுதல் டவுன் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நந்தினி, தடாகம்.