ஆனைமலையில் கொப்பரை தேங்காய் விலை குறைந்தது

ஆனைமலையில் கொப்பரை தேங்காய் விலை குறைந்தது;

Update:2021-12-28 22:24 IST
பொள்ளாச்சி

ஆனைமலையில் நடந்த ஏலத்தில் கொப்பரை தேங்காய் விலை குறைந்தது. இதன் காரணமாக இருப்பு வைத்து பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

விவசாயிகள் கவலை

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதற்கு விற்பனை கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் தலைமை தாங்கினார். 

ஏலத்திற்கு பொள்ளாச்சி, ஆனைமலை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொப்பரை தேங்காயை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். நெகமம், காங்கயம், வெள்ளக்கோவில் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஏலம் எடுத்தனர்.

கொப்பரை தேங்காய் வரத்து குறைந்தது. வரத்து குறைந்தும் விலை அதிகரிக்கவில்லை. கடந்த வாரத்தை விட மேலும் விலை குறைந்தது. கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து விலை குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் கூறியதாவது:-

இருப்பு வைக்க அழைப்பு

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்திற்கு 79 விவசாயிகள் 594 மூட்டை கொப்பரை தேங்காயை கொண்டு வந்தனர். தரம் பிரித்து கொப்பரை தேங்காய் ஏலம் விடப்பட்டது. அதன்படி 315 மூட்டை முதல் தர கொப்பரை தேங்காய் கிலோவுக்கு ரூ.89.40 முதல் ரூ.90.50 வரையும், 279 மூட்டை 2-ம் தர கொப்பரை தேங்காய் கிலோவுக்கு ரூ.70.50 முதல் ரூ.82 வரையும் ஏலம் போனது.

கடந்த வாரத்தை விட 25 மூட்டைகள் வரத்து குறைந்தது. மேலும் எண்ணெய் மார்க்கெட்டில் விலை சரிவு காரணமாக கடந்த வாரத்தை விட கிலோவுக்கு ரூ.5.50 விலை குறைந்தது. தொடர்ந்து விலை குறைந்து வருவதால் விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள குடோனில் இருப்பு வைத்துக் கொள்ளலாம். 

இதற்கு ரூ.3 லட்சம் வரை பொருளீட்டு கடன் வழங்கப்படுகிறது. விலை அதிகரிக்கும் போது விவசாயிகள் விளை பொருட்களை விற்பனை செய்து பயன்பெறலாம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்