மாமல்லபுரம் நாட்டிய விழாவில் ஆண்டாள் திருப்பாவை பரத நாட்டியம்
மாமல்லபுரம் நாட்டிய விழாவில் ஆண்டாள் திருப்பாவை பரத நாட்டியம் மார்கழி மாத புகழை பறைசாற்றும் வகையில் நடந்தது.;
மாமல்லபுரம்,
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் நகரம், சர்வதேச நாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் முக்கிய சுற்றுலா மையமாக திகழ்கிறது. தமிழக, மத்திய சுற்றுலாத்துறை பங்களிப்புடன் ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி மாதத்தில் நாட்டிய விழா நடைபெற்று வருகிறது. 2021-22-ம் ஆண்டுக்கான நாட்டிய விழா கடந்த 23-ந்தேதி தொடங்கியது. நேற்று 6-ம் நாள் விழாவில் செங்கல்பட்டு மீனாட்சி ராகவன் குழுவினரின் பரதநாட்டிய குழுவினரின் பரத நாட்டியம் நடந்தது.
மார்கழி மாதத்தின் சிறப்பை பறைசாற்றும் வகையில் ஆண்டாள் திருப்பாவை நாடகத்தின் மூலம் மீனாட்சி ராகவன் குழுவை சேர்ந்த பரத நாட்டிய கலைஞர்கள் கலைநயத்துடன் வெளிப்படுத்தினர்.
நேற்று சுற்றுலா வந்திருந்த பயணிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கடற்கரை கோவில் வளாகத்தில் அமர்ந்து பரத நாட்டியத்தை கண்டுகளித்து ரசித்தனர். விழாவின் இறுதியில் பரத நாட்டிய கலைஞர்களுக்கு மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் ராஜாராமன், சுற்றுலா அலுவலக நாட்டிய விழா பொறுப்பாளர் நிஜாமுதீன் ஆகியோர் நினைவு பரிசுகள் வழங்கி கவுரவித்தனர்.