பஞ்சாப்பில் தேசிய அளவில் நடந்த ஸ்கேட்டிங் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மாமல்லபுரம் சிறுமி
பஞ்சாப்பில் தேசிய அளவில் நடந்த ஸ்கேட்டிங் போட்டியில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தை சேர்ந்தவர் கமலி என்ற சிறுமி வெள்ளி பதக்கம் வென்றார்.;
மாமல்லபுரம்,
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தை சேர்ந்தவர் சுகந்தி (வயது 31). ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த இவர் மாமல்லபுரம் கடற்கரையில் வறுவல் மீன் வியாபாரம் செய்து வந்தார். இவரது மகள் கமலி (12). மாமல்லபுரம் தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடற்கரையில் சிறு வயதிலேயே ஸ்கேட்டிங் மற்றும் கடலில் அலைசறுக்கு விளையாட்டு என பயிற்சி பெற்று வந்தார்.
கடந்த 2019-ம் ஆண்டு மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்த சர்வதேச ஸ்கேட்டிங் வீரர் ஜெமி தாமஸ் என்பவர் கமலி கடற்கரையில் உள்ள ஸ்கேட் போட் தளத்தில் விளையாடியதை படம்பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியது வைரலானது.
இதற்கிடையே, காஞ்சீபுரம் மாவட்ட ஸ்கேட்டிங் போட்டியில், முதலிடம் பெற்று, தேசிய போட்டிக்கும் சிறுமி கமலி தேர்வானார். தற்போது பஞ்சாப் மாநிலம் சண்டிகாரில் நடந்த 59-வது ஸ்கேட்டிங் தேசிய போட்டியில், காஞ்சீபுரம் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் சார்பில், 11 - 14 வயதினர் பிரிவில் பங்கேற்ற கமலி தேசிய அளவில் 2-வது பரிசாக வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இது தவிர பல்வேறு மாநிலங்களில் நடந்த ஸ்கேட்டிங் போட்டிகளில் பங்கேற்று பல முறை பரிசுகளும், கோப்பையும் பெற்றுள்ளார். வெள்ளிப்பதக்கம் வென்ற இவரை பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.