காஞ்சீபுரத்தில் கொள்ளை வழக்கில் உறவினர் உள்பட 3 பேர் கைது - 44 பவுன் நகை, ரூ.1 லட்சம் மீட்பு

காஞ்சீபுரத்தில் வீடு புகுந்து கொள்ளை அடித்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 44 பவுன் நகை, ரூ.1 லட்சத்தை மீட்டனர்.;

Update:2021-12-29 14:31 IST
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாருதி நகர் சங்கரன் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 41). இவரது வீட்டுக்குள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நுழைந்த நபர்கள் வீட்டில் இருந்தவர்களை கத்திமுனையில் மிரட்டி அவர்களிமிருந்து 44 பவுன் நகை, 30 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.1 லட்சம் போன்றவற்றை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை துரிதப்படுத்தி குற்றவாளிகளை விரைந்து பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் ராஜகோபால், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சீனிவாசனின் உறவினரான காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் மேற்கு மாடவீதியை சேர்ந்த சந்தானகிருஷ்ணன் (28) மற்றும் சாலவாக்கம் கருநீகர் தெருவை சேர்ந்த கவுதம் (26), மதுராந்தகம் சம்பங்கிநல்லூர் கிராமம் அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்த சிவக்குமார் (24), ஆகியோர் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 44 பவுன் தங்க நகைகள், 30 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.1 லட்சம் போன்றவற்றை மீட்டனர்.

மேலும் செய்திகள்