பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் மின்தடை காரணமாக சி.டி. ஸ்கேன், எக்ஸ்ரே மையம் மூடல்
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் மின்தடை காரணமாக சிடி ஸ்கேன் எக்ஸ்ரே மையம் மூடல்;
பொள்ளாச்சி
மின்தடை காரணமாக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சி.டி. ஸ்கேன், எக்ஸ்ரே மையங்கள் மூடப்பட்டது. இதனால் நோயாளிகள் கடும் அவதியடைந்தனர்.
சி.டி. ஸ்கேன் மையம் மூடல்
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சுற்று வட்டார பகுதிகள் மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமானவர்கள் சிகிச்சைக்கு வருகின்றனர். இதில், தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இதை தவிர 300-க்கும் மேற்பட்ட நபர்கள் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயின் துல்லிய தன்மையை அறிவதற்கு ஆஸ்பத்திரி வளாகத்தில் சி.டி. ஸ்கேன் மையம் செயல்பட்டு வருகிறது.
இதைதவிர எக்ஸ்ரே மையம் உள்ளது. இந்த நிலையில் பொள்ளாச்சி நகரில் நேற்று பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக ஆஸ்பத்திரியில் ஜெனரேட்டர் வசதி இல்லாததால் சி.டி. ஸ்கேன், எக்ஸ்ரே மையங்கள் செயல்படவில்லை. இதையடுத்து அந்த மையங்களை மூடப்பட்டது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
ஜெனரேட்டர் வசதி இல்லை
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரி மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட பிறகும், அதற்கு ஏற்ப எந்த வசதிகளும் மேம்படுத்தவில்லை. நேற்று மின் தடை என்பதால் ஆஸ்பத்திரியில் சி.டி. ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்க முடியவில்லை.
மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஜெனரெட்டர் வசதி கூட இல்லாத நிலை உள்ளது. இதனால் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியவில்லை. நோயாளிகள் தனியார் ஸ்கேன் மையங்களுக்கு சென்று ஸ்கேன் எடுத்து வந்தனர்.
ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்த கோரி அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் குறிப்பிட்ட சில வார்டுகளில் மட்டும் ஜெனரெட்டர் மூலம் மின்வசதி ஏற்படுத்தப்பட்டு இருந்தது.
மற்ற வார்டுகளில் உள்ள நோயாளிகள் கடும் அவதிப்பட்டனர். எனவே ஆஸ்பத்திரியில் ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்த உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.