சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் ஆபத்தான 22 பள்ளி கட்டிடங்கள் இடித்து அகற்றம்
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் ஆபத்தான 22 பள்ளி கட்டிடங்கள் இடித்து அகற்றம்;
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் ஆபத்தான 22 பள்ளி கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன.
ஆபத்தான பள்ளி கட்டிடங்கள்
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் என மொத்தம் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில், மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம், சுல்தான்பேட்டை ஒன்றிய நிர்வாகம் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில், ஒன்றியத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் வகுப்பறை கட்டிடங்கள், சமையல் அறை, சுற்றுச்சுவர், கழிப்பறை, அங்கன்வாடி கட்டிடம் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டன. இதில் 31 கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இடித்து அகற்றம்
இதையடுத்து அந்த கட்டிடங்களை இடித்து அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதன்படி பொக்லைன் மூலம் இடித்து அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்று வரை மொத்தம் 22 பள்ளி கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன.
மீதமுள்ள 9 கட்டிடங்கள் விரைவாக இடித்து அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் இடித்து அப்புறப்படுத்தப்படுவதால் மாணவர்களின் உயிர் பாதுகாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பெற்றோர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.