மேட்டூர் அருகே மகனுக்கு நீச்சல் கற்றுக்கொடுத்த போது காவிரி ஆற்றில் மூழ்கியவர் கதி என்ன?-தேடும் பணி தீவிரம்

மேட்டூர் அருகே மகனுக்கு நீச்சல் கற்று கொடுத்த போது காவிரி ஆற்றில் மூழ்கியவர் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.;

Update:2021-12-30 03:32 IST
மேட்டூர்:
மேட்டூர் அருகே மகனுக்கு நீச்சல் கற்று கொடுத்த போது காவிரி ஆற்றில் மூழ்கியவர் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஒப்பந்த தொழிலாளி
மேட்டூரை அடுத்த குஞ்சாண்டியூர் பகுதியை சேர்ந்தவர் விஜய் (வயது 38). தனியார் தொழிற்சாலை ஒப்பந்த தொழிலாளி. இவர் தன்னுடைய மனைவி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு மேட்டூர் அனல்மின் நிலையம் புதுப்பாலம் பகுதியில் காவிரி ஆற்றில் குளித்து கொண்டிருந்தார்.
அப்போது தன்னுடைய 10 வயது மகனுக்கு நீச்சல் சொல்லி கொடுத்ததாக தெரிகிறது. அப்போது அந்த சிறுவன் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. மகனை காப்பாற்ற விஜய் ஆற்றில் நீந்தி சென்றார். மகனை மீட்டு கரைக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அவரால் தண்ணீரை விட்டு வெளியே வர முடியவில்லை. தண்ணீருக்குள் மூழ்கினார். அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. இதை பார்த்த மனைவி, பிள்ளைகள் சத்தம் போட்டு அலறினர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து விஜயை தேடி பார்த்தனர். அவர்களாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
கதி என்ன?
தகவல் அறிந்த மேட்டூர் போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்தனர். மீனவர்கள் உதவியுடன் விஜயை தேடினர். அப்படி இருந்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது கதி என்ன? என்பது தெரியவில்லை.
அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே விஜயை காணாதது குறித்து அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மேலும் செய்திகள்