புத்தாண்டு, பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்தில் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்: போலீஸ் சூப்பிரண்டு

புத்தாண்டு, பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்தில் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என்று போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் தெரிவித்துள்ளார்.;

Update:2021-12-30 20:22 IST
செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பரண்டு அரவிந்தன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடும் நடவடிக்கை

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் முக்கிய இடங்களில் தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீதும், அதிவேகமாக வாகனங்களை செலுத்துபவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

இளைஞர்கள் அதிவேகமாக வாகனங்களை செலுத்தி பந்தயங்களில் ஈடுபடுவதும், வாகன சாகசங்களில் ஈடுபடுவதும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். இது போன்ற அபாயகரமான செயல்கள், இதர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு மிகுந்த இடையூறாகவும், அச்சுறுத்தும் விதமாகவும் இருப்பதோடு பெரும் விபத்துகளுக்கு வழிவகுப்பதோடு மட்டுமின்றி அதனால் உயிர் சேதங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுபோன்று வாகன பந்தயத்தில் ஈடுபடுவோர் மீதும், இருசக்கர வாகன சாகசங்களில் ஈடுபடுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

700 போலீசார்

பொழுது போக்கு தலங்கள் மற்றும் விடுதிகளின் உரிமையாளர்கள் கொரோனா மற்றும் தற்போது பரவி வரும் ஒமைக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு அறிவுறுத்தியுள்ள வழிமுறைகளை தவறாமல் பின்பற்றுமாறும், மீறுபவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்து கொள்ளப்படுகிறது. மாவட்டம் முழுவதும் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர், பொதுமக்களும் கொரோனா தாக்கத்தை மனதில் கொண்டு அரசு அறிவுறுத்தியுள்ள வழிமுறைகளை பின்பற்றுமாறும் விபத்துகள் மற்றும் நோய் பரவலை கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு அளித்து இந்த பண்டிகை நாட்களை மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாடுங்கள் என்றும் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தகவல் தெரிவிக்கலாம்

தங்கள் பகுதிகளில் செயல்படும் பொழுது போக்கு தலங்கள் மற்றும் விடுதிகள் மேற்கூறிய விதிமுறைகளை மீறினால் அது குறித்தும், மதுபோதையில் வாகனத்தை செலுத்துதல் மற்றும் வாகன சாகசங்களில் ஈடுபடுதல் போன்ற இளைஞர்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்கள், செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் ஹலோ போலீஸ் எண் 7200102104-க்கு எந்த வித தயக்கமுமின்றி தொலைபேசி அல்லது வாட்ஸ்அப் வாயிலாக தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியமாக வைத்து பாதுகாக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்