ஆவின் துணை மேலாளருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை
முகவரிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆவின் துணை மேலாளருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.;
கோவை
முகவரிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆவின் துணை மேலாளருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
ரூ.3 ஆயிரம் லஞ்சம்
கோவை ராமநாதபுரம் பகுதியில் ஆவின் பூத் முகவராக இருந்தவர் உதயகுமார். இவர் மீது ஆவின் நிறுவனத்திற்கு முறைகேடு புகார் சென்றதாக தெரிகிறது. அந்த புகார் மனு தொடர்பாக அவருக்கு சாதகமான அறிக்கை அளிக்க கோவை ஆவின் சந்தைப்படுத்துதல் துணை மேலாளர் தங்கவேலு என்பவர் ரூ.3 ஆயிரம் லஞ்சமாக வாங்கினார்.
இதனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். அவர் மீது லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கடந்த 2013-ம் ஆண்டு ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு, கோவை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.
சிறை தண்டனை
இந்த நிலையில் நேற்று மாலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், லஞ்சம் கேட்ட குற்றத்துக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், லஞ்சம் வாங்கிய குற்றத்துக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ராமதாஸ் தீர்ப்பளித்தார்.
அத்துடன் இந்த தண்டனையை தங்கவேலு ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.