விமானத்தில் ரூ.1 கோடி தங்கம் கடத்தல்
சார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் ரூ.1 கோடி தங்கம் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
கோவை
சார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் ரூ.1 கோடி தங்கம் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரகசிய தகவல்
கோவையில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான விமானங்கள் வந்து செல்கின்றன. இந்த விமானங்களில் வரும் பயணிகள் தங்கம் உள்பட விலை உயர்ந்த பொருட்களை கடத்தி வருகிறார்களா? என்பது குறித்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம்.
இந்த நிலையில் சார்ஜாவில் இருந்து கோவைக்கு வரும் ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தங்கம் பறிமுதல்
அதன்படி சார்ஜாவில் இருந்து கோவைக்கு ஏர் அரேபியா விமானம் வந்தது. அந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளை அதிகாரிகள் கண்காணித்தனர். அதில் 2 பயணிகளின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்களை தனியாக அழைத்து சென்று சோதனை செய்தனர். மேலும் அவர்கள் கொண்டு வந்த பைகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது அதில் 2 பேர், உள்ளாடைகளிலும், ஆசன வாயிலும் மறைத்து வைத்து 2 கிலோ 200 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1 கோடியே 10 லட்சம் ஆகும்.
2 பேர் கைது
விசாரணையில் அவர்கள் நசாருதீன் முகமது தம்பி, கலில் ரகுமான் முஸ்தபா ஆகியோர் என்பது தெரியவந்தது. அதிகாரிகள் அவர்களை கைது செய்ததோடு கடத்தி வரப்பட்ட தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, பிடிபட்ட 2 பேரும் கொண்டு வந்தது சுத்தமான தங்கம் ஆகும். பொதுவாக ரூ.20 லட்சத்துக்கும் மேல் மதிப்புள்ள தங்கத்தை கொண்டு வந்தால் அந்த நபர் கைது செய்யப்படுவார். தற்போது பிடிபட்ட 2 பேரிடம் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.1 கோடியே 10 லட்சம் என்பதால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்றனர்.