தொண்டாமுத்தூர் உள்பட 4 இடங்களில் புதிதாக உழவர் சந்தை அமைக்க வேண்டும்
கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர் உள்பட 4 இடங்களில் புதிதாக உழவர் சந்தை அமைக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.;
கோவை
கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர் உள்பட 4 இடங்களில் புதிதாக உழவர் சந்தை அமைக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் பலர் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர். அப்போது கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் கந்தசாமி கூறியதாவது:-
நரசீபுரத்தில் சுந்தர பெருமாள் கோவிலுக்கு சொந்தமாக 7 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இங்கு தென்னை, வாழை, மா உள்பட பல வகை மரங்கள் உள்ளன. இந்த நிலத்தில் சமீபத்தில் காட்டுயானைகள் புகுந்து, மரங்களை சேதப்படுத்தி விட்டன. எனவே கலெக்டர் நேரடியாக ஆய்வு செய்து, உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும். பயிர் காப்பீடு செய்வதில் உள்ள நடைமுறை சிக்கல்களை களைய வேண்டும்.
தொழிற்பேட்டைக்கு அனுமதி வழங்கக்கூடாது
உப்பிலிபாளையத்தில் உள்ள ஓடையில் பாலம் கட்ட பொதுப்பணித்துறை வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும். வாளையாரில் இருந்து காட்டம்பட்டி வரை கியாஸ் குழாய்கள் பதிக்க நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த குழாய்களை முடிந்தவரை புறம்போக்கு நிலங்களில் பதிக்க வேண்டும். கிரஷர், தார் தொழிற்சாலை உள்ளிட்டவைகளுக்கு அனுமதி அளிக்கும்முன், நேரடியாக கலெக்டர் ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில நிர்வாகி வேணுகோபால் கூறுகையில், மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் பகுதியில் சுமார் 1000 ஏக்கரில் தொழிற்பேட்டை அமைய உள்ளது. இதற்கு அனுமதி வழங்கக்கூடாது என்றார்.
கடும் புகைமூட்டம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் பழனிச்சாமி கூறும்போது, கள்ளபாளையம் பகுதியில் செயல்படும் தனியார் நிறுவனங்களில் டயர் உள்ளிட்ட பொருட்களை எரிப்பதால், கடும் புகைமூட்டம் ஏற்படுகிறது. மேலும் நீர்நிலைகள், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது. இதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
விவசாயி தங்கமுத்து பேசுகையில், எல்லபாளையம் அருகே பயனின்றி கிடக்கும் சமுதாய கூடத்தில் விவசாயிகள் மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரித்து விற்க அனுமதிக்க வேண்டும் என்றார். மேலும் மரநெல்லி நாற்றுகள் வழங்க கோரிக்கை விடுத்த விவசாயிகளுக்கு, அடுத்த 40 நாட்களுக்குள் வழங்கப்படும் என்று தோட்டக்கலைத்துறை அதிகாரி புவனேஸ்வரி பதில் அளித்தார்.
புதிய உழவர் சந்தை
இது தவிர தொண்டாமுத்தூர், கருமத்தம்பட்டி, அன்னூர், சுல்தான்பேட்டை ஆகிய 4 இடங்களில் புதிய உழவர் சந்தை அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.பின்னர் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் அடங்கிய கையேடு வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், வேளாண் இணை இயக்குனர் சித்ராதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.